
கடலில் சென்று அணிகளால் மின்கம்பியை கடிக்க முடியாது என்பதால் கடலில் காற்றாலை அமைந்திருப்பதை பார்க்க செல்கிறாரா அமைச்சர் செந்தில்பாலாஜி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிண்டலடித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக- திமுக இடையே மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றாலும் அதிமுக பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் அரசை மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றன. எதிர்க் கட்சியாக அதிமுக இருந்தாலும் மக்கள் மன்றத்தில் தாங்களே எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுகவை காட்டிலும் திமுகவை விமர்சிப்பதில் பாஜகவினர் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவர் மீதும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார், குறிப்பாக அவரது பெரும்பாலான குற்றச்சாட்டுகள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நோக்கியே இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மேடையில் பேசிய அமைச்சர் தா.மோ அன்பரசன் அண்ணாமலையை ஒருமையில் பேசிய சம்பவம் பாஜகவினரை கொதிப்படைய வைத்துள்ளது. இதனால் அமைச்சர்களை சகட்டு மேனிக்கும் தாக்கும் நடவடிக்கையில் பாஜகவினர் இறங்கியுள்ளனர். இந்நிலையில் மதுரை பழங்கா நத்தத்தில் மத்திய அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை திமுக ஆட்சியை திராவிட மாடல் என்று பெருமையாகச் சொல்கிறார்கள், ஆனால் அது சினிமா மாடல் ஆட்சி என்றார். சம்பந்தமே இல்லாமல் தமிழக முதலமைச்சர் பள்ளிக்கூடத்திற்கும் காவல் நிலையத்திற்கும் சர்ப்ரைஸ் ஆய்வு செய்து வருகிறார்.
ஆனால் அவர் செல்வதற்கு முன்பாகவே அங்கே கேமராமேன்கள் இருக்கிறார்கள், முதல்வர் எங்கெல்லாம் செல்கிறதோ அது சூட்டிங் ஸ்பார்ட்டாக மாறிவிடுகிறது. எப்போதிலிருந்து முதலமைச்சர் ஆய்வு செய்ய ஆரம்பித்தாரோ அப்போதிலிருந்து தமிழகத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன. மதுரையில் ஒரு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் என்ற அமைச்சர் இருக்கிறார். அவரிடம் எதுவும் கேட்கமுடியாது, அப்படிக் கேட்டால் என்னை பற்றி தெரியுமா? என் தந்தையை பற்றி தெரியுமா? என் தாத்தாவை பற்றி தெரியுமா? என பேசத் தொடங்கி விடுகிறார். பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரக்கூடாது என்கிறார். ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு கொடுத்து விட்ட பிறகும் எவ்வளவு நிலுவையில் இருக்கிறது எனக்கு தெரியவில்லை என உளறுகிறார். அதேபோல் அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்காட்லாந்து செல்லவிருக்கிறார், எதற்காக என்று கேட்டால் கடலில் காற்றாலை அமைத்துள்ளதைப் பார்க்க செல்கிறார் என்கின்றார்கள். கடலில் சென்று அணிலால் மின்கம்பியை கடிக்க முடியாது என்பதால் அதில் அவர் ஆர்வம் காட்டுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் சோலார் பிளான்ட் அமைக்க லஞ்சம் கேட்கிறார். இதையெல்லாம் சொன்னால் அவர் என் மீது வழக்கு போடுகிறார். இவ்வாறு அண்ணாமலை அமைச்சர் செந்தில்பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.