ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது கோரும் மனு தள்ளுபடி - "நாங்கள் யாருக்கும் உத்தரவிட முடியாது..." உயர்நீதிமன்றம் கருத்து

First Published Jan 6, 2017, 1:53 PM IST
Highlights


மறைந்த முதல்வர் ஜெயல்லிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி தமிழ்நாடு பொதுநல வழக்குகள் மையம் சார்பில் கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஜெயலலிதா ஐந்து முறை முதல்வராக இருந்துள்ளார். ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக கறவை மாடுகள் வழங்கும் திட்டம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், இலவச சைக்கிள் திட்டம் உள்ளிட்ட  பல நல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். 
அதனால் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி கடந்த டிசம்பர் 15ம் தேதி மத்திய பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை.
 எனவே, ஜெயலலிதாவை கவுரப்படுத்தும் வகையில், மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா வழங்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு இன்று   தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி,  எந்த ஒரு விருதையும், எவர் ஒருவருக்கும் வழங்குங்கள் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தல்ல என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  
வழக்கை தொடுத்த  கே.கே.ரமேஷ் ஏற்கனவே நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு  பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பொது நல வழக்கு தொடுத்தவர். அந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்கள் பதிலளிக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக நிலுவையில் உள்ளது.        

click me!