ஒன்றிய அரசு என்று அழைக்க தடை விதிக்க முடியாது - உயர் நீதிமன்றம் உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Jul 1, 2021, 1:28 PM IST
Highlights

முதலமைச்சர் ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை அவ்வாறே தொடர்ந்து அழைக்கப்படும் என தெரிவித்தார்

ஒன்றிய அரசு  என்ற வார்த்தையை பயன்படுத்த தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
 
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேச்சு என அனைத்திலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு வார்த்தையை பயன்படுத்த பாஜக சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.இருப்பினும், ஒன்றிய அரசு என்பதை பயன்படுத்துவது சமூக குற்றம் அல்ல எனவும், அதனை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராமசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.  அதில், “தமிழக அரசின் அலுவல் ரீதியான அறிவிப்புகள், நிகழ்த்தப்படும் உரைகள் போன்ற எல்லாவற்றிலும் “ஒன்றிய அரசு ” என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா அல்லது பாரதம் என்ற இரண்டு வார்த்தைகளே உள்ளன. அவ்வாறு இருக்கையில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது” என தெரிவிக்கப்பட்டது. 

அதற்கு நீதிபதிகள், “கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்வதையே கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இருக்கையில் இப்படித்தான் பேச வேண்டும் என எவ்வாறு உத்தரவிட முடியும்?” என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில்,  “சட்டமன்றத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது முதலமைச்சர் ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை அவ்வாறே தொடர்ந்து அழைக்கப்படும் என தெரிவித்தார்” என குறிப்பிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், “மனுதாரர் கோரும் வகையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இவ்வாறு தான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட இயலாது” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

click me!