அகவிலைப்படி ரத்து, ஜாக்டோஜியோ ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து.. முதல்வருக்கு வலுத்து வரும் கோரிக்கைகள்

By Thiraviaraj RMFirst Published May 1, 2020, 11:45 PM IST
Highlights

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்,அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் நீ.இளங்கோ 'தமிழக அரசு அகவிலைப்படி ரத்து,ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கினை ரத்து செய்வது குறித்தும் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்

T.Balamurukan

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்,அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் நீ.இளங்கோ 'தமிழக அரசு அகவிலைப்படி ரத்து,ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கினை ரத்து செய்வது குறித்தும் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், தமிழக அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது மும்முனைத் தாக்குதலை தொடுத்துள்ளது. உயிரையும் பொருட்படுத்தாது பல்வேறு நிலைகளில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

    மருத்துவர்கள், மருத்துவ சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் காவல்துறை அலுவலர்கள், நகராட்சிப் பணியாளர்கள், உள்ளாட்சியமைப்பு பணியாளர்கள், வருவாய் துறை பணியாளர்கள்,விவசாயத் துறை அலுவலர்கள், பால்வளத்துறை, மின்துறை உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

 ஆசிரியர்கள் பல்வேறு இடங்களில் தன்னார்வலர்களாக பணியாற்றி வருகிறார்கள். உணவு கிடைக்காத வெளிமாநிலத் தொழிலாளர்கள், ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு தங்களால் இயன்ற உணவு, உடை மற்றும் அவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான அடிப்படைத் தேவைகளை தொடர்ந்து வழங்கி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.

    தமிழக அரசு மத்திய அரசின் அறிக்கையை சுட்டிக் காட்டி, 18 மாதங்களுக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்துள்ளது. இது ஏறக்குறைய 20 முதல் 30 நாட்கள் ஊதியத்திற்கு சமமாகும். தமிழக அரசு கேட்டுக்கொள்வதற்கு முன்பாகவே ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்கள்  ஒரு நாள் ஊதியமான  150 கோடி ரூபாயை கொரோனா நிதியாக வழங்கியுள்ளனர்.

1.அகவிலைப்படி*

    ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைப்பது பல்வேறு பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும். அகவிலைப்படி உயர்வு என்பது மத்திய மாநில அரசுகளின் விலைவாசி குறியீடுகளின் அடிப்படையில், விலைவாசி உயர்வுகளை சமாளிப்பதற்கு வழங்க கூடிய நிவாரணமாகும். தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், கச்சா  எண்ணெய் விலை மிக மிக குறைந்து விட்ட சூழலிலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்விதமான மாற்றம் இல்லாத நிலையிலும், அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

 மூன்று அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த காலத்தில் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுகால பயன்களுக்கு இந்த அகவிலைப்படியை கணக்கில் எடுத்துக்கொள்ள இயலாது. இது பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் . ஓய்வு பெறுபவர்களுக்கு  அகவிலைப்படி உயர்வை ஓய்வுகால பலன்களை கணக்கிடும் போது பணப்பலனை அனுமதிக்க வேண்டும். கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையிலும், ஆசிரியர்கள் அரசுடன் இணைந்து தன்னார்வத்துடன் பணியாற்றி வருவதோடு தேர்வுப் பணிகளிலும் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளனர் என்பதை தமிழக அரசு உனரவேண்டும்.

2. ஈட்டிய விடுப்பு

    மத்திய அரசே அறிவிக்காத  ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பினை தமிழக அரசு தடை செய்திருக்கிறது. இது 2003 ஆம் ஆண்டு கால வரலாற்றினை நினைவுபடுத்துகிறது. ஆசிரியர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிப்பது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை உடனே கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

3. வருங்கால வைப்பு நிதி

    கொரோனா நிதி நெருக்கடியின், தொடர் நடவடிக்கையாக,  வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 0.8 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிதி நெருக்கடிக்கு அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அனைத்து சுமைகளையும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது சுமத்துவது ஏற்புடையது அல்ல.

தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவர்களும், ஜாக்டோ-ஜியோவும் போராடியபோது அவர்கள் மீது பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இடமாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன. இன்றுவரை ஓர் ஆண்டுகளுக்கும் மேலாக அவற்றின் மீது தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனாலும் தமிழக மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் செவிலியர்கள் அரசு ஊழியர்கள் அரசுக்கு ஏற்படும் இக்கட்டான சூழல்களில் இயற்கை பாதிப்புகளில் முழு ஒத்துழைப்பு அளித்து தங்களுடைய ஊதிய பங்களிப்பும்  நல்கி சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

அரசின் அச்சாணியாக பணியாற்றி வரும்  ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது இதுபோன்ற தொடர் தாக்குதல்கள், அவர்களுக்கு பொருளாதார இழப்புகள் மட்டுமின்றி உளவியல்  பாதிப்புகளையும் ஏற்படுத்தும் . எனவே தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாக இது போன்ற பொருளாதார தாக்குதல்களை கைவிட வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலத்தில் எடுக்கப்பட்ட  ஒழுங்கு நடவடிக்கைகள், இடமாறுதல் உத்தரவுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்   என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

click me!