ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் போலீசே இப்படி செய்யலாமா..?? அதிர்ச்சியில் பொது மக்கள்..

By Ezhilarasan BabuFirst Published Apr 15, 2021, 12:59 PM IST
Highlights

இந்நிலையில் நீண்ட வரிசையில் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள காத்திருக்கும் காவலர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் தனிமனித இடைவெளியின்றி முண்டியடித்தவாறு நிற்பதும், முகக்கவசங்களை அறைகுறையாக அணிவதும் பாதுகாப்பற்ற ஒரு சூழலை அங்கு உருவாக்கியுள்ளது.

பொதுமக்களுக்கு முகக் கவசம் அணியவும், தனி மனித இடைவெளியை பின்பற்றவும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் காவலர்களே தனிமனித இடைவெளியின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள முந்தியடித்து முட்டி மோதியவாறு வரிசையில் நிற்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொரோனா பெருந்தொற்றின் 2ஆம் அலை வேகமாக பரவிவரும் நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை பின்பற்றவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், அரசு மருத்துவமனைகள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலமும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என அனைவருக்கும் தடுப்பூசியானது செலுத்தப்பட்டுவருகிறது. 

குறிப்பாக சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் தினசரி 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு வருகின்றனர். இன்றும் போக்குவரத்து காவல்துறையினர், ஆயுதப்படை காவல்துறையினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். பிற அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்துக் கொள்ளும் வசதிகள் இருந்தாலும் இங்கு காவலர்களுக்கென பிரத்தியேகமாக தடுப்பூசி செலுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலான காவலர்கள் இங்கே தடுப்பூசி செலுத்துகின்றனர். இந்நிலையில் நீண்ட வரிசையில் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள காத்திருக்கும் காவலர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் தனிமனித இடைவெளியின்றி முண்டியடித்தவாறு நிற்பதும், முகக்கவசங்களை அறைகுறையாக அணிவதும் பாதுகாப்பற்ற ஒரு சூழலை அங்கு உருவாக்கியுள்ளது. 

கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணிதல் குறித்தும், தனிமனித இடைவெளி குறித்தும் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் காவல்துறையிலேயே இத்தகைய அவலம் அரங்கேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினருக்கென பிரத்தியேகமாக இந்த ஒரு இடமே தடுப்பூசி செலுத்த அமைக்கப்பட்டுள்ளதால்தான் இந்த நெருக்கடி சூழல் உருவாகியுள்ளதாகவும், உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி காவலர்கள் தடுப்பூசி செலுத்துக்கொள்ள மையங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் சில காவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 

click me!