
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா குடும்பத்தினர் என்ன சொல்லச் சொன்னார்களோ அதைத்தான் ஊடகங்களிடம் தெரிவித்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்த கருத்தால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, தான் உட்பட சில அமைச்சர்கள் ஜெயலலிதாவை பார்த்ததாகவும் அவர் இட்லி சாப்பிட்டதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி தெரிவித்திருந்தார். ஜெயலலிதா தங்களிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.
முதல்வர் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தபிறகு அதே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவின் மறைவிற்கு சசிகலா குடும்பத்தினர்தான் காரணம் என குற்றம்சாட்டினார். மேலும் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் சந்தேகம் எழுப்பியதோடு அமைச்சர்களோ கட்சியின் நிர்வாகிகளோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என தெரிவித்தார். சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை பார்த்ததாகவும் கூறினார்.
சசிகலாவிற்கு ஆதரவாக இருந்தபோது ஒருமாதிரியாகவும் அவரை எதிர்த்தபிறகு வேறு மாதிரியாகவும் முற்றிலும் முன்னுக்குப் பின் முரணாக அமைச்சர் பேசுவது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. இதனால் பீதியடைந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சசிகலா குடும்பத்தினர் சொல்லச் சொல்லியதையே ஊடகங்களிடம் கூறியதாகத் தெரிவித்தார். ஜெயலலிதா உணவு அருந்தியதாக சசிகலா குடும்பத்தினர் கூறச்சொன்னதையே ஊடகங்களிடம் தெரிவித்தோம் எனவும் ஆனால் ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை எனவும் அமைச்சர் விளக்கம் அளித்தார். அமைச்சரின் இந்த விளக்கத்தால் ஒட்டுமொத்த தமிழகமே வியந்து நிற்கிறது. அமைச்சராக இருந்துகொண்டு கொஞ்சம்கூட உறுத்தல் இல்லாமல் மற்றவர் சொல்ல சொன்னதை ஊடகங்களிடம் தெரிவித்தோம் என கூறும் இவரெல்லாம் ஒரு அமைச்சரா? என்ற கேள்வி எழுவதில் ஆச்சரியமில்லை.
மக்கள் மனதில் எழும் மேலும் பல கேள்விகள்:
மற்றவர்கள் சொல்வதை கேட்டுவந்து சொல்லுவதற்காகவா உங்களை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுத்தோம்? அதற்காகவா ஜெயலலிதா உங்களை அமைச்சராக்கினார்? அப்படி மற்றவர்கள் சொல்வதை கேட்டு எங்களிடம் சொல்லும் இடைத்தரகராக நீங்கள் எங்களுக்குத் தேவையில்லையே? நாம் கண்ணால் பார்க்காத விஷயத்தை ஊடகங்கள் வாயிலாக உலகிற்கு கூறுகிறோமே.. நாளை ஏதாவது பிரச்னை வந்தால் என்ன செய்வது? என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமலா அமைச்சர்கள் பேசுவார்கள்? இத்தகைய புரிதலும் அறிவும்கூட இல்லாதவர்கள்தான் அமைச்சர்களாக இருக்கிறார்களா? இப்படிப்பட்டவர்கள் எந்த மாதிரியான திட்டங்களை நமக்கு கொடுப்பார்கள்? எத்தகைய ஆட்சியை நமக்கு வழங்குவார்கள்? என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் என நினைத்தார்களா? நம்மை எவ்வளவு கேவலமாக நினைத்திருந்தால் இப்படி மாறிமாறி பேசுவார்கள்? என்பன போன்ற அடுக்கடுக்கான பல கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன.