முதல்வர் பழனிசாமியின் சேலம் நிகழ்ச்சிகளை படம்பிடித்த கேமராமேனுக்கு கொரோனா..!

By karthikeyan VFirst Published Jun 13, 2020, 10:26 PM IST
Highlights

சேலத்தில் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிகளை படம்பிடித்த அரசு கேமராமேனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. இன்று மேலும் 1989 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 42,697ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வரும் காலங்களில், இதைவிட வேகமாக பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளில் களத்தில் இறங்கி பணியாற்றிவரும், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மக்கள் பிரதிநிதிகளுக்கும் தொற்று உறுதியாகிறது. 

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 

தொடர்ச்சியாக மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், அடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் பழனிசாமி கலந்துகொண்ட நிகழ்ச்சிகளை படம்பிடித்த கேமராமேனுக்கு தொற்று கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதல்வர் பழனிசாமி, சேலத்தில் ஈரடுக்கு மேம்பால திறப்பு மற்றும் மேட்டூர் அணை திறப்பு ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிகளை படம்பிடிக்க அரசு சார்பில் சென்னையில் இருந்து கேமராமேன் அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளை படம்பிடித்த அந்த கேமராமேனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே முதல்வர் மற்றும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. 
 

click me!