எடப்பாடி கூப்பிட்டா நான் போகணுமா? ஓபிஎஸ் கொந்தளிப்பால் தகித்த கோட்டை..!

By vinoth kumarFirst Published Sep 24, 2020, 11:40 AM IST
Highlights

முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் இருந்து கொண்டே செல்லாமல் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தவிர்த்திருப்பது கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் இருந்து கொண்டே செல்லாமல் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தவிர்த்திருப்பது கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாக இருந்த அதிமுக ஒன்றான பிறகு துணை முதலமைச்சராக பதவி ஏற்றார் ஓபிஎஸ். பெயருக்குத்தான் துணை முதலமைச்சரே தவிர அவர் கவனித்து வரும் இலாக்காக்களான நிதித்துறை, வீட்டு வசதித்துறை மட்டுமே அவரது கட்டுப்பாட்டில் உண்டு. மற்றபடி அனைத்து துறைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே கவனித்து வருகிறார். துறை சார்ந்த ஆலோசனை கூட்டங்களில் கூட துணை முதலமைச்சருக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படுவது இல்லை. உதாணரத்திற்கு தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் என்றால் அதில் அந்த இலாகாவை கவனித்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே கலந்து கொள்வார்.

இதே போல் வருவாய்த்துறை ஆலோசனை கூட்டம் என்றால் அந்த துறைக்கான அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மற்றும் முதலமைச்சர் பங்கேற்பர். இது போன்ற கூட்டங்களுக்கு துணை முதலமைச்சராக இருக்கும் ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. அதே போல் தனது துறை சார்ந்த கூட்டம் என்றால், அதாவது நிதித்துறை, வீட்டு வசதித்துறை ஆலோசனை கூட்டம் என்றால் அதனை ஓபிஎஸ் தலைமை ஏற்று நடத்துவார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக் அந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு செல்லாது. இதனால் துணை முதலமைச்சர் என்பது பெயர் அளவிற்கு தான்.

மற்றபடி தமிழக அரசை ஒற்றை ஆளாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் கட்டி ஆண்டு வருகிறார். ஆனால் புதிய திட்டங்கள் எதுவும் துவக்கம் என்றால் அதற்கு துணை முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படும். அதிலும் ஓபிஎஸ் தவறாமல் கலந்து கொள்வார். உதாரணத்திற்கு அண்மையில் நடமாடும் ரேசன் கடை திறப்பு விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க ஓபிஎஸ்சுக்கு அழைப்பு சென்றது. அவரும் துவக்க விழாவில் பங்கேற்றார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால் இதுபோன்ற திட்டங்கள் துவக்க விழாவிற்கு கோட்டையில் இருக்கும் அமைச்சர்கள் அனைவருக்கும் அழைப்பு செல்லும்.

அந்த வகையிலேயே துணை முதலமைச்சரான ஓபிஎஸ்க்கும் அழைப்பு அனுப்பப்படுவதாக கூறப்படுவதுண்டு. மற்றபடி சட்டம் ஒழுங்கு தொடர்புடைய முக்கிய ஆலோசனைகள், முக்கிய திட்டங்களை துவங்குவது தொடர்பான முக்கிய விவாதங்களில் ஓபிஎஸ்சை இபிஎஸ் ஒரு போதும் அழைப்பதும் இல்லை, அனுமதிப்பதும் இல்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே பனிப்போர் அதிகமாகியுள்ளது. இதற்கு காரணம் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தான். எடப்பாடி பழனிசாமி அதிமுக தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

ஆனால் அதற்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இது குறித்து அண்மையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அனைவரும் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு ஓபிஎஸ்சிடம் சற்று இறங்கி செல்லும் வியூகத்தை எடப்பாடி பழனிசாமி பின்பற்றுவதாக சொல்கிறார்கள். அதாவது செயற்குழு கூட உள்ள நிலையில் ஓபிஎஸ்சை டென்சன் ஆக்க வேண்டாம் என்பதுடன் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எடப்பாடி நடந்து கொள்வதாக கூறுகிறார்கள். உதாரணத்திற்கு சென்னை கோட்டையில் நேற்று முக்கிய ஆலோசனை ஒன்று நடைபெற்றது.

அதாவது வரும் 1ந் தேதி முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனை பிரச்சனை இல்லாமல் அமல்படுத்துவது குறித்து துறை சார்ந்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஓபிஎஸ்சுக்கும் அழைப்பு விடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதாக சொல்கிறார்கள். வழக்கமாக இதுபோன்ற கூட்டங்களுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள். ஆனால் ரேசன் திட்ட ஆலோசனை கூட்டத்திற்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ்க்கு அழைப்பு சென்றுள்ளது.

கூட்டம் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சும் பங்கேற்பார் என்று அதிகாரிகள் தகவல்களை கசியவிட்டனர். ஆனால் கூறியபடி கூட்டம் 3 மணிக்கு தொடங்கவில்லை. இதற்கு காரணம் ஓபிஎஸ் வராதது தான் என்கிறார்கள். ஓபிஎஸ் வருகைக்காக முதலமைச்சரும் காத்திருந்ததாக சொல்கிறார்கள். ஆனால் ஓபிஎஸ் வரவில்லை. இதனை அடுத்து முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளனர். விவரத்தை ஓபிஎஸ்  உதவியாளர் அவரிடம் கூற, அதற்கு ஓபிஎஸ் கொந்தளித்ததாக சொல்கிறார்கள்.

எடப்பாடி கூப்பிட்டா, நான் உடனே அங்க ஓடிப்போகனுமோ? என்று ஓபிஎஸ் கொதித்ததாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன ஓபிஎஸ் உதவியாளர், அய்யா வேறு ஒரு ஆலோசனையில் இருக்கிறார் நீங்களே கூட்டத்தை நடத்திக்கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் அலுவலகத்திற்கு தகவல் அளித்ததாக கோட்டை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. அதாவது இதுநாள் வரை ஆலோசனைகளுக்கு தன்னை அழைத்தது இல்லை, தற்போது மட்டும் அழைப்பது எதற்கு? தேர்தல் நாடகமா? என்று ஓபிஎஸ் கேட்பதாக கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் சமயத்தில் ஒற்றுமையுடன் செயல்பட இபிஎஸ் விரும்புவதாக அவரது தரப்பில் சொல்கிறார்கள்.

click me!