
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
நடப்பு ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 23-ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி மாதம் 27, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மார்ச் 16-ந்தேதி மீண்டும் கூடிய தமிழக சட்டசபை கூட்டத்தில், 2017- 2018-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்த பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததால், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவில்லை. சட்ட சபையும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. இந்த மாதம் 2-வது வாரத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கும்போது, துறை ரீதியாக என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும், பேரவை விதி எண் 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.
அடுத்த சில நாட்களில் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அப்போது சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்றும், எந்தெந்த நாளில் எந்தத் துறையை சேர்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.