
கோவையில் ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தொழிலதிபரிடம் இருந்து அபகரிக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஜான்பாண்டியனையும் கைது செய்ய தனிப்படை போலீசார் தென்மாவட்டங்களுக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தனியார் அப்பார்ட்மென்டில் வசித்து வருபவர் அஸ்வனி குமார் அரோரா என்பவரின் மகன் தீபக் அரோரா (39). இவருக்கும் பிரியா அரோரா (39) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தீபக் அரோரா துருவ் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் இரு சக்கர வாகனங்களுக்கு உரிய எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மற்றும் ஹெல்மெட் விற்பனையகம் நடத்தி வருகிறார். மனைவி பிரியா அரோரா பெயரில் கடந்த 2018ஆம் ஆண்டு மணியகாரம்பாளையம் பகுதியில் நாலரை சென்ட் இடத்தை வாங்கி அங்கு தனது விற்பனையகத்தை நடத்திவருகிறார்.
இந்நிலையில் பிரியா அரோராவிற்கு வேறு ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது பற்றி அறிந்த தீபக் அரோரா அவரை கண்டித்தார். ஆனாலும் அவர்களது கள்ளக்காதல் தொடரவே தீபக் அரோராவை விட்டு பிரியா அரோரா பிரிந்து சென்றார். அதன் பின்பு கணவர் தீபக் அரோரா பிரியா அரோரா பெயரில் வாங்கி உள்ள சொத்துக்களை கைப்பற்ற முயற்சி செய்தார். இதையடுத்து தீபக் அரோரா பிரியா அரோரா மீது குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். மேலும் பிரியா அரோரா பெயரில் தீபக் அரோரா வாங்கிய சொத்துக்கள் மீது தீபக் அரோரா சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் .
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா அரோராவின் சொத்துக்களை தமிழக முன்னேற்ற கட்சியின் நிறுவனர் ஜான் பாண்டியன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது கட்சி நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக தீபக் அரோரா வை மிரட்டி இடத்தை காலி செய்யும்படி கூறி வந்தனர். ஆனால் தனது மனைவி பெயரில் தன்னுடைய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துக்களை விட்டு காலி செய்ய முடியாது என்று மறுத்தார் .இதையடுத்து இரு தரப்பினருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தகராறு இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 20க்கும் மேற்பட்ட தமிழக முன்னேற்ற கட்சி நிர்வாகிகள் தீபக் அரோரா அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது தீபக் அரோரா வெளியில் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். இதையடுத்து அங்கு வந்திருந்தவர்கள் இடத்தை காலி செய்யாவிட்டால் உயிரோடு விட மாட்டோம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், பயந்துபோன அரோரா சரவணம் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், நான் எனது குடோனில் இருந்த போது. 7 பேர் வந்து தாங்கள் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என கூறியதுடன். நான் தொழில் நிறுவனம் நடத்தி வரும் இடம் அவர்களுக்கு சொந்தமானது உடனடியாக காலி செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்தனர். மேலும். அவரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டினர். அவர்கள் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதன் பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மிரட்டல் விடுத்தவர்கள் மணியகாரன் பாளையம் ஜெயராஜ்(52), விநாயகபுரம் சந்தோஷ்(52), விளாங்குறிச்சி ஜெகன்(40), வீரகேரளம் தீபன்(36), விடிஎஸ் நகரை சேர்ந்த மதன்(33), மீனா எஸ்டேட்டை சேர்ந்த கதிரவன்(49), கணபதி கருப்பசாமி (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 7 பேரும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருப்பதா தெரிகிறது. 7 பேரும் கொடுத்த வாக்குமூலத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜான்பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.