விரைவில் பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி உயரப்போகுது.. அலறவிடும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்!

Published : Mar 21, 2022, 09:42 PM IST
விரைவில் பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி உயரப்போகுது.. அலறவிடும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்!

சுருக்கம்

ஏற்கெனவே 2.14 கோடி குடும்ப இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை தருவதாக திமுக வாக்குறுதி அளித்தது. அதை வழங்காமல், தற்போது அரசுப் பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாக அறிவித்திருக்கின்றனர். 

உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு பேருந்துக் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி எனப் பொதுமக்களுக்குப் பரிசாக பல்வேறு விலை உயர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அளிக்க உள்ளார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி 4-ஆவது முறையாக இன்று கையெழுத்திட்டார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர். சிவபதி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மறைந்த தமிழக முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. விவசாயிகளுக்கென ஒருங்கிணைந்த திட்டத்தை முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா மிக முக்கியமாக செயல்படுத்தினார்.

ஏமாற்று வேலை

ஆனால், திமுக அரசு தற்போது தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கென எந்தப் பிரத்யேக திட்டங்களும் இல்லை. மீன் வளம், பால் வளம், கால்நடை பராமரிப்பு போன்ற துறைகளின் நிதியையும், வேளாண் பட்ஜெட்டில் சேர்த்து விவசாயிகளை ஏமாற்றும் வேலையைத்தான்  திமுக அரசு செய்துகொண்டிருக்கிறது. இந்த வேளாண் பட்ஜெட் என்பது விவசாயிகளுக்கு ஒட்டுமொத்தமாக ஏமாற்றம்தான். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் பல திட்டங்களைச் செயல்படுத்தினார். அதனால் மக்களின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றிருந்தார்.

உரிமைத் தொகை என்னானது?

ஓர் அரசு என்பது அடித்தட்டு மக்களின் கஷ்டத்தைப் புரிந்து  நலத் திட்டங்களைத் தீட்ட வேண்டும். இப்போதிருக்கும்  திமுக அரசு, எதற்கெடுத்தாலும் சமூக நீதி என்று பேசுகிறது. ஆனால், தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி போன்ற திட்டங்களை நிறுத்திவிட்டது. ஏற்கனவே 2.14 கோடி குடும்ப இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை தருவதாக திமுக வாக்குறுதி அளித்தது. அதை வழங்காமல், தற்போது அரசுப் பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாக அறிவித்திருக்கின்றனர். திமுக அரசின் ஏமாற்று வேலையை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். எனவே, தகுந்த பாடத்தை தேர்தல் களத்தில் மக்கள் அளிப்பார்கள்.

விரைவில் ஸ்டாலின் பரிசு

உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு பேருந்துக் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி என பொதுமக்களுக்குப் பரிசாக பல்வேறு விலை உயர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அளிக்க இருக்கிறார்” என்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!