பிஎஸ்என்எல் நிறுவனத்தை இழுத்து மூட முடிவு …..அதிர்ச்சியில் ஊழியர்கள் !!

By Selvanayagam PFirst Published Oct 10, 2019, 7:56 PM IST
Highlights

கடும் நிதி நெருக்கடி மற்றும் நஷ்டத்தில்  சிக்கித் தவிக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை இழுத்து மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபடும் வரும் மத்திய அரசுக்கு சொந்தமான எம்.டி.என்.எல். மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. மத்திய அரசு அந்த நிறுவனங்களுக்கு புத்துயிர் கொடுக்க என்ன செய்யலாம் என தீவிர ஆலோசனை செய்து வருகிறது. அதேசமயம் அந்த நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தி விடலாம் என மத்திய அரசுக்கு சிலர் ஆலோசனை சொல்லி வருவதாக தகவல்.

எம்.டி.என்.எல். மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களில் வருவாயை காட்டிலும் செலவு அதிகமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக தங்களது பணியாளர்களுக்கு சம்பளம் கூட போட முடியாத நிலையில் அந்த நிறுவனங்கள் உள்ளன. 

எம்.டி.என்.எல். பணியாளர்களுக்கு கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இதே போல் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு கடந்த மாத சம்பளம் இன்னும்  தரப்படவில்லை.

இதனையடுத்து பொறுமை இழந்த எம்.டி.என்.எல். பணியாளர்கள் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்கள் செல்ல செல்ல போராட்டத்தின் அளவு மற்றும் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எங்களது பிரச்னை விரைவில் தீர்க்கப்படவில்லையென்றால் நாங்கள் சும்மா உட்கார்ந்து இருக்க மாட்டோம் என ஊழ்யர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே பிஎஸ்என்எல் நிறுவனத்தை இனி தொடர்ந்து நடத்த முடியாது என்பதாலும், அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாலும் அதை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அடுத்து நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

click me!