அதிகார போதையில் தள்ளாடும் முதல்வர்.. அப்பாவி மக்களுக்கு நோய் பரவ நீங்கள் தான் காரணம்.. கொதிக்கும் தினகரன்..!

By vinoth kumarFirst Published Sep 18, 2020, 12:14 PM IST
Highlights

அரசின் விதிகளை முதலமைச்சரே மதிக்காமல் அரசு விழாவை நடத்தினால் மற்றவர்கள் எப்படி அதனை மதிப்பார்கள்? அதிமுக தொண்டர்களைப் பற்றி முதலமைச்சருக்கு அக்கறையில்லாமல் போனாலும், அப்பாவி மக்களுக்கு நோய் பரவுவதற்கு அவரே காரணமாக இருப்பது குற்றமில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  

சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு தமிழக முதல்வருக்கு பொருந்தாதா என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 5 பேருக்கு மேல் பொது இடத்தில் கூடக் கூடாது என்று சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு தமக்குப் பொருந்தாது என்ற நினைப்பில் முதல்வர் பழனிசாமி தொடர்ந்து நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது. கொரோனா தொற்றின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், சென்னை பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்புவிழா என்ற பெயரில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கூத்துகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. திட்டமிட்டு ஆட்களைக் கூட்டிவந்து சமூக இடைவெளியின்றி அவர்களை நிற்கவைத்து வரவேற்பு என்ற பெயரில் அரசு பிறப்பித்திருக்கும் அத்தனை நோய் தடுப்பு விதிமுறைகளையும் மீறும் வகையில் நடந்துகொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் இவ்வாறுதான் நடந்துகொண்டார் என்று சாடியுள்ளார்.

அரசின் விதிகளை முதலமைச்சரே மதிக்காமல் அரசு விழாவை நடத்தினால் மற்றவர்கள் எப்படி அதனை மதிப்பார்கள்? அதிமுக தொண்டர்களைப் பற்றி முதலமைச்சருக்கு அக்கறையில்லாமல் போனாலும், அப்பாவி மக்களுக்கு நோய் பரவுவதற்கு அவரே காரணமாக இருப்பது குற்றமில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  

கொரோனா பரவலுக்கு பொதுமக்கள்தான் காரணம் என சித்திரிக்கும் முதல்வர், அதற்கு நேர்மாறாக தானே செயல்படுவது எவ்வகையில் சரியாக இருக்க முடியும்? சட்டத் திட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா? தமக்குப் பொருந்தாது என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? மேம்பால திறப்பு போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் காணொலிக் காட்சி வழியாக நடத்திவிட முடியாதா? படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்பது போல் உள்ளது அவருடைய செயல்பாடு என்றும் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

மாவட்டத்திற்கு மாவட்டம் இந்தக்கொடுமை போதாதென்று, முதலமைச்சர் பழனிசாமி செல்லுமிடம் எல்லாம் மணிக்கணக்கில் போக்குவரத்தை நிறுத்திவைத்து, ஏற்கனவே கொரோனாவால் நொந்து  போயிருக்கும் மக்களை வாட்டி வதைக்கிறார்கள். அதிகாரம் தரும் தடுமாற்றத்தில் போடும் இந்த ஆட்டங்களை எல்லாம் மக்கள் பார்த்துகொண்டே இருக்கிறார்கள் என்பதை மட்டும் மறந்துவீடாதிர்கள். அவர்களுக்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும்  நினைவில் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். 

click me!