இந்த நாடு எனக்கும் உங்களுக்கும் சொந்தமென்று பேசியது குற்றமா.? கைதுக்கு முன் ஜெஎன்யூ மாணவர் உமர் காலித் வீடியோ.

By Ezhilarasan BabuFirst Published Sep 18, 2020, 12:07 PM IST
Highlights

பிப்ரவரி 17 அன்று அமராவதியில் நான் 17 நிமிடங்கள் பேசியதில், கலவரம் வன்முறை என்று பேசவில்லை, சத்தியாகிரகம் அகிம்சை என்றுதான் பேசினேன்.

கேள்வி கேட்பவர்களையெல்லாம் பாஜக அரசு கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது என்றும். ஆட்சியாளர்களின் இந்த அநீதிக்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என்றும் ஜேஎன்யூ மாணவர் உமர் காலித் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி வன்முறை தொடர்பாக, ஜேஎன்யூ மாணவர் உமர் காலித்தை டெல்லி காவல்துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தது. தற்போது அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனிடையே போலீஸ் கைதுக்கு முன்னதாக உமர் காலித் பேசியிருக்கும் 2 நிமிடம் 18 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசி இருப்பதாவது. "நீங்கள் இந்த வீடியோவை பார்க்கிறீர்கள் என்றால் நான் கைது செய்யப்பட்டேன் என்று அர்த்தம்"  ஏனெனில் 2020 பிப்ரவரியில் தலைநகரில் பெரிய அளவிலான வகுப்புவாத வன்முறையை தூண்டியவர்களை நோக்கி போலீஸ் வலை விரியவில்லை. 

அவர்கள் மீது எல்லாம் வழக்குப்பதிவு செய்யவில்லை. எப்ஐஆர் கூட வேண்டாம், அவர்களை கூப்பிட்டு விசாரிக்க கூட இல்லை, மாறாக குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள், அரசை விமர்சிப்பவர்கள் மீது  டெல்லிகாவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் கூட அவர்களிடத்தில் இல்லை, என் மீதும் தவறான குற்றங்களை சுமத்தி, கைது செய்வதற்கு சில நாட்களாகவே தில்லி காவல் துறையினர் நேரம் பார்த்து வந்தனர். பிப்ரவரி 17 அன்று அமராவதியில் நான் 17 நிமிடங்கள் பேசியதில், கலவரம் வன்முறை என்று பேசவில்லை, சத்தியாகிரகம் அகிம்சை என்றுதான் பேசினேன். 

இந்நிலையில் எனக்கு எதிராக பொய் குற்றச்சாட்டை சுமத்தி, எனக்கு எதிராக பொய் சாட்சியங்களை தயாரித்து வருகின்றனர். அரசை விமர்சித்தவர்கள் அனைவரையும் சிறைக்குள் தள்ள முயற்சிகள் நடக்கின்றன. நான் என்ன குற்றம் செய்தேன்? இந்த நாடு எனக்கும் உங்களுக்கும் சொந்தமென்று பேசியதுதான் குற்றமா? மக்கள் இதனை அனுமதிக்காதீர்கள், அஞ்சாதீர்கள், அனைவரும் அநீதிக்கு எதிராக குரல் கொடுங்கள், இவ்வாறு அதில் உமர் காலித் பேசியுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

click me!