அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி வாங்கும் லஞ்சம் பிச்சை எடுப்பதற்கு சமம்... நீதிபதிகள் சாட்டையடி..!

By Thiraviaraj RMFirst Published Oct 15, 2020, 6:06 PM IST
Highlights

வறுமையில் சிக்கி தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவே அரசு விவசாயிகளுக்கு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைக்கு ரூபாய் 40 ரூபாய் லஞ்சமாக அரசு அதிகாரிகள் பெறுவதாகவும், விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்ய அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த சூரிய பிரகாசம் , உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விவசாயிகள் இரவு, பகல் பாராமல் விவசாயம் செய்து பிறருக்கு உணவூட்டி வருகிறார்கள். ஆனால், விவசாயிகள் உற்பத்திப் பொருட்களை சரியான நேரத்தில் விற்பனை செய்ய இயலாத காரணத்தால் சாலைகளில் இரவு பகலாக காத்து கிடக்கின்றனர். அதேபோல் வறுமையில் சிக்கி தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவே அரசு விவசாயிகளுக்கு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாமல் ஒருபக்கம் இருக்கக்கூடிய சூழலில் இந்த பொருட்களை விற்பனை செய்ய அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வேதனையானது. மேலும் அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சைக்காரர்களுக்கு சமமானவர்கள். மேலும் கூட்டுறவு ஆலைகளில் போதுமான பாதுகாப்பு ஈரம் புகாமல் தடுக்க கூடிய பாதுகாப்பு கிடைப்பதில்லை . இதன் காரணமாக விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க  கூடிய சூழ் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இது மட்டும் இன்றி விவசாயிகள் கொண்டு வரும் நெல் முட்டைகளுக்கு ஒரு மூட்டைக்கு ரூபாய் 40 ரூபாய் லஞ்சமாக அரசு அதிகாரிகள் பெற்று வருகின்றனர் மேலும் முறையான கொள்முதல் செய்யப்பட வில்லை என்ற விவசாயிகளின் போராட்டத்தை நாள்தோறும் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் நுகர்பொருள் வாணிப கழக இயக்குனரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்டனர். மேலும்  இது குறித்து நாளை உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

click me!