
போடிநாயக்கனூர் நகராட்சி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுகவை சேர்ந்த கிருஷ்ண வேணி தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போடிநாயக்கனூர் நகராட்சியில் 33 வார்டுகளில் திமுக, 20, அதிமுக 9, காங்கிரஸ் 1, இந்திய கம்யூனிஸ்ட் 1, பாஜக 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கியதால் 21, 29 வது வார்டுகளில் கணவன், மனைவி போட்டியிட்டு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர், மனைவி ராஜராஜேஸ்வரி வெற்றி பெற்றனர். திமுக தலைமை நகராட்சி தலைவருக்கு ராஜராஜஸ்வரியும், இந்திய கம்யூனிஸ்ட் சேர்ந்த பெருமாள் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பெருமாள் தனது வேட்பு மனுவில் முன்மொழிபவர், வழிமொழிபவர் கையெழுத்து போட திமுகவினர் முன்வரவில்லை. இதனையடுத்து, நகராட்சி துணைத்தலைவராக திமுகவை சேர்ந்த கிருஷ்ணவேணி தேர்வு செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் இந்த பிரச்சனை ஏற்பட்டதால் கூட்டணி கட்சி தலைவர்கள் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் திமுக போட்டி வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அதில் அவர், கட்டுப்பாட்டை காற்றில் பறக்கவிட்டு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். அதன் பிறகு என்னை சந்தியுங்கள் என்று கூறியிருந்தார். இதையடுத்து போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கி வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனையடுத்து, தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் போடிநாயக்கனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. இதில், நகராட்சி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிருஷ்ணவேணி தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அந்த பதவியை இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பெருமாள் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.