
தனது தந்தைக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதாகவும் நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது தந்தை டி.ஆர் முழு சுயநினைவுடன், நலமாக உள்ளார் என்றும் அந்த அறிக்கையில் சிம்பு கூறியுள்ளார்.
என் தங்கை கல்யாணி, மைதிலி ஒரு காதலி, ஒரு வசந்த கீதம் என 1980களில் அடுத்தடுத்த பல படங்களை இயக்கி அதில் கதாநாயகனாக நடித்தவர் டி ராஜேந்தர். அவன் இயக்கும் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், நடனம், இசை என அனைத்தையும் டி.ராஜேந்திரனே செய்து தனது படங்களை வெற்றிப்படங்கள் ஆக்கியவர் ஆவார். தனது அடுக்குமொழி பேச்சால் ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் டி.ஆர். மற்ற நடிகர்களைப் போல சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளை தனது படத்தில் அறவே தவிர்த்து பலரின் பாராட்டையும் பெற்றவர் ஆவார். கதாநாயகிகளை கட்டிப்பிடிப்பது, அவர்கள் மீது கையை வைப்பதே போன்ற காட்சிகள் டி.ராஜேந்தர் படத்தில் அறவே இருக்காது. இப்படி பல தனி பண்புகளால் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சிம்மாசனத்தில் அமர்ந்தவர் டி.ஆர்.
எப்போதும் கலகலப்பாகவும், உற்சாகம் குறையாமல் இருக்கக் கூடியவர் அவர், இயக்குனர், நடிகர், திரைப்பட விநியோகஸ்தர், இசையமைப்பாளர், பாடகர், அரசியல்வாதி என பல முகங்கள் அவருக்கு உண்டு. இந்நிலையில் டி.ராஜேந்தர் கடந்த 4 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவருக்கு இதயத்தில் பிரச்சனை ஏதாவது இருக்குமோ என அஞ்சினர். ஆனால் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகமோ, குடும்பத்தினரோ எந்த தகவலையும் கூறாமல் இருந்து வந்த நிலையில், அவரது மகன் சிம்பு தனது தந்தை டி.ஆர் உடல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
எனது ஆருயிர் ரசிகர்களுக்கும் , அன்பான பத்திரிகை , ஊடக நண்பர்களுக்கும் வணக்கம் . எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் , அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம் . அங்கு பரிசோதனையில் , அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் , அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் , அவர் உடல் நலன் கருதியும் , உயர் சிகிச்சைக்காகவும் , தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம் . அவர் முழு சுய நினைவுடன் , நலமாக உள்ளார் . கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து , உங்கள் அனைவரையும் சந்திப்பார் . உங்கள் பிரார்த்தனைகளுக்கும் , அனைவரின் அன்புக்கும் நன்றி . நன்றி , உங்கள் அன்புள்ள , Ar -சிலம்பரசன் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.