
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவிவந்த நிலையில் , தற்போது அது சரியத் தொடங்கியுள்ளது. ஆனாலும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை குறையவில்லை. வைரஸ் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் ஆர. பி உதயகுமார்தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது, இந்நோய்க்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இணையாக கருப்பு பூஞ்சை தமிழக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நோயை கடந்த 20ஆம் தேதி மத்திய அரசு பெருந்தொற்று நோயாக அறிவித்துள்ளது. இதையொட்டி கடந்த 1ஆம் தேதி பாரத பிரதமருக்கு முன்னாள் முதலமைச்சர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அதில், தனது கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு ஆக்சிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவர் மருந்துகளையும் அதிகப்படுத்தியதற்காக நன்றி என கூறியுள்ளார், மேலும் தற்போது கருப்பு பூஞ்சை தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது எனவே அதையும் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்றும், எனவே கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சில நாட்களாக மதுரையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தற்போது கொரோனாவிலிருந்து குணமடையும் சிலருக்கு, கண்களில் கருப்பு பூஞ்சை நோய்த் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன், மதுரை உட்பட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழப்பு ஏற்படுவது அதிர்ச்சி அளிக்கிறது, இந்த பூஞ்சையினால் யாரும் உயிர் இழக்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோயின் தீவிரத்தையும், தாக்கத்தையும் தடுத்து நிறுத்தி மக்களின் உயிர்களை காக்க அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.