அடுத்தடுத்து உயிர் பலி வாங்கும் கருப்பு பூஞ்சை... தனியார் பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published May 28, 2021, 5:56 PM IST
Highlights

திருப்பத்தூரில் பள்ளி கணித ஆசிரியர் கருப்பு  பூஞ்சை நோய் பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

திருப்பத்தூரில் பள்ளி கணித ஆசிரியர் கருப்பு  பூஞ்சை நோய் பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பு பூஞ்சை நோய் என்பது மியூகோர்மைக்ரோசிஸ் என்ற நுண்ணிய பூஞ்சை கிருமியால் பரவுவது. சாதாரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை இந்த நோய் தாக்கும் என்றாலும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஸ்டீராய்டு மருந்தை அதிகளவில் எடுத்துக்கொண்டவர்களை இந்நோய் எளிதில் தாக்கும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை எடுக்கும் நோயாளிகள் ஸ்டீராய்டு மருந்தை உடன் எடுத்துக் கொள்ளும் போது கருப்பு பூஞ்சை தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நோய் கண்களை பாதித்து அதன் பிறகு மூளைக்கும் பரவி இறப்புக்கு காரணமாகிறது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்து கொண்டால் இந்நோயில் இருந்து தப்பிக்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். 

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு (37). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். சின்னராசுக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. 

இதையடுத்து அவர் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சின்னராசுக்குக் கண்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவருக்குக் கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்று ஏற்பட்டது உறுதியானது. இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சின்னராசு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கருப்பு பூஞ்சை நோயால் தனியார் பள்ளி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!