பா.ஜ.க.,வின் இரட்டை வேடம்... தமிழகத்திற்கு செக் வைக்க அதிரடி திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Nov 11, 2021, 2:34 PM IST
Highlights

பாஜகவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை அரசியல் ரீதியாக ஆதாயம் தேட கையில் எடுத்து இருக்கிறது கர்நாடக காங்கிரஸ். 

பெங்களூருவுக்கு குடிநீர் வழங்கும் மேகதாது திட்டத்தை அரசியல் ஆதாயத்திற்காக கையில் எடுத்து தமிழகத்திற்கு பாஜக மூலம் நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. 

சமீபகால இடைத்தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் நடவடிக்கைகளுடன் வேகத்தைத் தொடர திட்டமிட்டுள்ளது. கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் மேகதாது திட்டத்தை கையிலெடுத்து பாதயாத்திரையை அறிவித்துள்ளனர். 

காவிரி ஆற்றி மீது மேகதாதுவில் 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது. ஆனால், இதற்கு தமிழ்நாட்டில்  கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனால் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் இருந்து கர்நாடகா ஒப்புதலை பெறமுடியவில்லை. 

கர்நாடகாவில் 2018 ல் தேர்தலின்போது பாஜக மேகதாது திட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஏனெனில் பாஜக மத்தியிலும் கூட ஆட்சியில் இருந்தது. தற்போது கர்நாடகாவிலும், மத்தியிலும் பாஜகவே  ஆட்சியில் இருந்தும் அவர்களால் மேகதாது திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. 

இந்த நிலையில்தான் பாஜகவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை அரசியல் ரீதியாக ஆதாயம் தேட கையில் எடுத்து இருக்கிறது கர்நாடக காங்கிரஸ். இதுகுறித்து அம்மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது கூறுகையில்,  ’’பாஜகவின் இந்த கபடத்தை அம்பலப்படுத்தவே இந்த பாதயாத்திரை.

டிசம்பர் முதல் வாரத்தில் நடைப்பெறும் இந்தப் பாதயாத்திரை 100 கி.மீ. செல்லும். மேகதாதுவில் இருந்து எங்கள் பாதயாத்திரையை தொடங்கி பெங்களூரு நோக்கி நடப்போம். மேகதாது எங்கள் நிலத்தில், எங்களின் பணத்தில் கட்டப்பட்டு, எங்களின் பங்கான காவிரி நீரை சேமித்து வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். 

அடுத்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முன்னதாக கட்சியின் செயல்பாடுகள் குறித்து வியூகம் வகுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்டில், ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், லோக்சபாவில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், ’’கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை மேலும் மதிப்பாய்வு செய்ய முடியாது. இந்த திட்டத்திற்கு கர்நாடகாவுக்கு மற்ற நதியோர மாநிலங்களின் ஒப்புதல் தேவை’’ என்று அவர் தெரிவித்தார். இது கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதலவர் பி.எஸ்.எடியூரப்பா கொடுத்த வாக்குறுதிக்கு எதிரானது. பாஜக மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள் அப்போதே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தன. 

பாஜகவின் தமிழக தலைவர் கே.அண்ணாமலை இந்த திட்டத்திற்கு எதிராக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். இது "அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்று பசவராஜ் பொம்மை கூறினார்.

இந்த விவகாரம் பாஜக தேசிய பொதுச் செயலாளரான கர்நாடகாவைச் சேர்ந்தவரும், தமிழ்நாட்டின் பாஜக பொறுப்பாளருமான ர் சி.டி. ரவி, ‘’இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை ஆதரிப்பேன்’’ எனத் தெரிவித்து இருந்தார்.மேகதாது விவகாரத்தில் நாங்கள் கன்னட மற்றும் கர்நாடகாவுக்கு ஆதரவாக இருக்கிறோம், ”என்று சித்தராமையா தெரிவித்தார். 

click me!