தமிழகத்தில் சாதி- மத வன்முறையை தூண்ட பாஜக முயற்சி... திருமாவளவன் திடுக் குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RMFirst Published Oct 27, 2020, 6:07 PM IST
Highlights

தமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜ.க முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜ.க முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ‘’மருத்துவ கல்விக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது. ஒருபுறம் இந்துக்களின் பாதுகாவலர்கள் என கூறும் மத்திய பா.ஜ.க அரசு இந்துக்களுக்கு எதிராக அபிடவிட் தாக்கல் செய்துள்ளது. சமூக நீதிக்கு எதிராக அவர்கள் வெளிப்படையாக செயல்படுகிறார்கள். இந்த ஆண்டே மருத்துவக்கல்வியில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசை வலியுறுத்தி வரும் நாளை  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஓ.பி.சி. மாணவர்கள் படிக்கும் வாய்ப்புகள் பறிபோவதை பற்றி தலைவர்கள் கவலைப்படுவ தில்லை. கல்வி பெறாமல் மோதலை உருவாக்குவதையே விரும்புகிறார்கள். பா.ஜ.க.,வின் மூத்த தலைவர்கள் உள்பட பலரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் சாதி, மதம் பெயரால் வன்முறையை தூண்ட வேண்டும் என முயற்சியில் ஈடுபட முயல்வது தெரிகிறது.

பெண்களை பற்றி பா.ஜனதாவினர் தவறாக கூறி வருகின்றனர். இவர்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் நான் பேசியதை திரித்து அவமதிக்கும் வகையில் என்னை பற்றி தவறாக பேசி வருகின்றனர். இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் கூறியதை திரித்து வன்முறையை தூண்டி பொய் புகார் அளித்த பா.ஜனதாவினர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி வரும் 31-ந்தேதி தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கும்.

மனுநூல் குறித்து பெண்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருகிற 3,4, மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று பரப்புரை செய்ய உள்ளோம். ‘மகளிர் விழிப்புணர்வு மக்கள் சந்திப்பு’ என்ற பெயரில் இது தமிழகம் முழுவதும் கிராம அளவிலும் நடக்கும். மனுநூல் இன்றைய அவலங்களுக்கு காரணமாக உள்ளதையும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சிறுமிகள், தலித் மீதான வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது’என அவர் தெரிவித்தார்.

click me!