அவமதிக்கப்பட்ட வள்ளுவர் சிலைக்கு பாஜகவினர் பாலபிஷேகம்..! மாலை அணிவித்து வழிபாடு..!

By Manikandan S R SFirst Published Nov 5, 2019, 4:55 PM IST
Highlights

தஞ்சாவூர் அருகே மர்ம நபர்களால் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு பாஜகவினர் பாலபிஷேகம் செய்து, மாலையணிவித்து வழிபட்டனர்.

தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டின் தாய்மொழியில் திருக்குறளை வெளியிட்டார். தனது பேச்சின் இடையிலும் திருக்குறளை தமிழில் மேற்கோள் காட்டி உரையாற்றினார். இதை கொண்டாடும் வகையில் தமிழக பாஜக தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுர் படத்தை காவி உடையுடன் வெளியிட்டது. இது பலத்த சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு தரப்பினரும் தமிழக பாஜக திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூச முற்படுவதாக குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் தஞ்சாவூர் அருகே இருக்கும் பிள்ளையார்பட்டியில் இருந்த திருவள்ளுவர் சிலை மர்ம நபர்கள் சிலரால் நேற்று அவமதிக்கப்பட்டது. 3 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையின் மீது ஆள்நடமாட்டமில்லாத நேரத்தில் சிலர் சாணியை கரைத்து ஊற்றியுள்ளனர். தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் உடனடியாக சிலையை சுத்தம் செய்து மாலையணிவித்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது. அரசியல் கட்சிகள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அவமதிக்கப்பட்ட திருவள்ளுர் சிலைக்கு பாஜக சார்பாக இன்று மரியாதை செய்யப்பட்டது. சிலை அமைந்திருக்கும் பகுதிக்கு திரண்டு வந்த பாஜகவினர் திருவள்ளுவர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து மாலை அணிவித்து வழிபட்டனர். நேற்றில் இருந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் சிலையை அவமதித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

click me!