அடுத்து மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சிதான்... 200 தொகுதிகள் பாஜகவுக்கே... மார்த்தட்டும் அமித்ஷா..!

By Asianet TamilFirst Published Nov 6, 2020, 9:23 PM IST
Highlights

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சரும் பாஜக முன்னாள் தலைவருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 

மேற்கு வங்காளத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக ஆகிய கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்துவருகின்றன. தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா மேற்கு வங்காளம் வந்திருந்தார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அமித் ஷா பேசும்போது, “2011-ம் ஆண்டில் மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்க மக்கள் வாய்ப்பு கொடுத்தார்கள். ஆனால், 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மம்தாவின் வாக்குறுதிகள் எல்லாம் வெற்று வாக்குறுதிகளாகவே உள்ளன. எனவே, மம்தா மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியில் உள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் மோடி தலைமைக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்தால், ஐந்து ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தை சோனார் பங்க்ளாவாக்குவோம். பாஜகவின் இலக்கே மேற்கு வங்காளத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே. கொரோனா வைரஸ், வெள்ள நிவாரணங்களில்கூட ஊழல் செய்ய திரிணாமுல் காங்கிரஸ் வெட்கப்படவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும். மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்ததுபோல எங்களுக்கு வாக்களிப்பார்கள்.” என்று அமித் ஷா தெரிவித்தார்.

click me!