கர்நாடகாவைப் போல் தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமையும்... அபரிவிதமான நம்பிக்கையில் சி.டி.ரவி..!

By vinoth kumarFirst Published Dec 16, 2020, 4:02 PM IST
Highlights

திமுக குடும்ப நலனைக் காக்க பாடுபடுகிறது. பாஜக மக்கள் நலனைக் காக்க பாடுபடுகிறது என பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான சி.டி.ரவி கூறியுள்ளார்.

திமுக குடும்ப நலனைக் காக்க பாடுபடுகிறது. பாஜக மக்கள் நலனைக் காக்க பாடுபடுகிறது என பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான சி.டி.ரவி கூறியுள்ளார். 

கடந்த மக்களவைத் தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்தித்தது. இதனையடுத்து, அதிமுகவை கடுமையாக தமிழக பாஜக தலைவர்கள் விமர்சிக்க தொடங்கினார். இதற்கு அதிமுக தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால், சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக தொடருமா என்ற ஐயம் அனைவரும் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அக்கட்சியின் முக்கிய தலைவரான அமித் ஷா முன்னிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனாலும், கூட்டணி பற்றி எதையும் அமித் ஷா பேசவில்லை. தேர்தல் கூட்டணி தொடர்பாக அகில இந்திய தலைமைதான் அறிவிக்கும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தொடர்ந்து கூறிவருகிறார்.

அத்துடன் தேர்தல் அறிக்கை தயாரிக்க ஹெச்.ராஜா தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான சி.டி.ரவி, மாநிலத் தலைவர் எல்.முருகன், இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, கூட்டத்தில் பேசிய எல்.முருகன்;- தமிழகத்தில் நடத்தப்பட்ட வேல் யாத்திரை தடையையும் மீறி பொது மக்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார். பாஜக பலவீனமாக உள்ள மாவட்டங்களிலும் வேல் யாத்திரை நடத்தி முடிக்கப்பட்டதால் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அச்சம்  அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் முன்னிறுத்தப்படும் வேட்பாளரை முதலமைச்சராக வேண்டும். தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். 

இறுதியாக உரையாற்றிய சி.டி.ரவி;- திமுக குடும்ப நலனைக் காக்க பாடுபடுகிறது. பாஜக மக்கள் நலனைக் காக்க பாடுபடுகிறது. வேளாண் சட்டங்கள் அமலான பிறகும்கூட பல மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவைப் போல தமிழகத்திலும் கேரளாவிலும் பாஜக ஆட்சியமைக்கும் என்று பேசினார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், ரவியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

click me!