மேற்கு வங்கத்தில் பாஜக 70 தொகுதிகளைக்கூட தாண்டாது... பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி அதிரடி சவால்..!

By Asianet TamilFirst Published Apr 14, 2021, 10:04 PM IST
Highlights

மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக 70 தொகுதிகளைக்கூட தாண்டாது என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  சவால் விடுத்துள்ளார்.
 

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டங்களில் 135 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வரும் 17-ம் தேதி ஐந்தாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. ஐந்தாம் கட்டத் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஜல்பைகுரியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 
அப்போது அவர் பேசுகையில், “மேற்கு வங்கத்தில் இதுவரை 4 கட்டங்களாக 135 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இந்த 135 தொகுதிகளில் 100 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று மோடி சொல்கிறார். ஆனால், நான் சொல்கிறேன். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது பாருங்கள். பாஜக 294 தொகுதிகளில் 70 இடங்களில் கூட ஜெயிக்காது. ஒரே பிரச்சினையைப் பற்றி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகவும் பொய் பிரச்சாரத்தை பாஜக தலைவர்கள் செய்கிறார்கள். 
டார்ஜிலிங் பகுதியில் உள்ள லேபாங் பகுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது  என்ஆர்சி கொண்டுவர மாட்டோம் என்கிறார். ஆனால், 14 லட்சம் பேரை அடையாளம் கண்டுள்ள மத்திய அரசு, அவர்களைத் தடுப்பு முகாமுக்கு அனுப்ப தயாராக உள்ளது. இவர்களை என்ஆர்சி சட்டத்தில் சட்டவிரோத அகதிகள் என முத்திரை குத்தி முகாமுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களை அச்சறுத்தும் என்ஆர்சி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம். நீங்கள் எல்லாருமே குடிமக்கள். என்னுடைய வேண்டுகோள், நீங்கள் தவறாமல் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவியபோதுபோது பல்வேறு மாநிலங்களில் இருந்த மேற்குவங்க மக்களை என்னுடைய அரசுதான் செலவு செய்து சொந்த மாநிலத்துக்கு அழைத்து வந்தது. ஆனால், அப்போது எந்த பாஜக தலைவரும் உதவவில்லை. வெளியேகூட வரவில்லை. பாஜக என்பது மக்கள் விரோத கட்சி. ஏழைகளுக்கு எதிரான கட்சியும்கூட. ஏழைகளுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் அந்தக் கட்சி எடுக்கிறது. உணவுப்பொருட்கள் விலை உயர்வுக்கு அனுமதிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை அனுமதிக்கிறது. சமையல் சிலிண்டர் விலையை விண்ணளவு உயர்த்துகிறது” என்று மம்தா பானர்ஜி சாடினார்.
 

click me!