பாஜக., மூத்த தலைவர் லால் கிஷண் அத்வானியை ஜனாதிபதி ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள் விரும்பினர் என்று மனம் திறந்து பேசியுள்ளார் அக்கட்சியின் எம்.பி.யும் நடிகருமான சத்ருஹன் சின்ஹா. தற்போது 71 வயதாகும் சத்ருகன் சின்ஹா, தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்தான் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். மத்தியில் பாஜக., 2014 தேர்தலில் போட்டியிட்ட போது, அத்வானியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை. 2009ல் நடந்த மக்களவைத் தேர்தலில், அத்வானி முன்னிறுத்தப் பட்டார். அப்போதே பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாயி, உடல் நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று ஒதுங்கிவிட்டார். அதனால் துணை பிரதமராக இருந்த அத்வானி முன்னிலைப் படுத்தப் பட்டார். ஆனால், கட்சி பெரிய அளவில் வெற்றி பெற இயலவில்லை. தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அத்வானிக்கு பதிலாக, அவரது சீடராகக் கருதப் பட நரேந்திர மோடி முன் நிறுத்தப் பட்டார். தாம் முதன்முறையாக எம்.பி. ஆன போதே பிரதமராக நாடாளுமன்றத்தில் கால் பதித்தார் மோடி. அப்போது, மோடி, அமித் ஷா கூட்டணி நன்றாக வேலை செய்தது. கட்சிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைத்தது. ஆனால், இளைய தலைமுறை தலை எடுத்ததும், கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர் அல்லது தாங்களாகவே ஒதுங்கிக் கொண்டனர். அவர்களில் சத்ருஹன் சின்ஹாவும் ஒருவர். பாஜக., இளைய தலைமுறையின் செயல்பாடுகள் குறித்து, குறிப்பாக மோடி, அமித் ஷா குறித்து, அவ்வபோது ஏதாவது விமர்சனம் செய்வார். முன்னதாக ஜனாதிபதி தேர்தல் வந்த போது, அத்வானியை ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் சார்பில் முன்னிறுத்த வேண்டும் என்று சத்ருகன் சின்ஹா நேரடியாகவே வலியுறுத்தினார். ஆனால், பாஜக.,வோ, ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி தேர்தலில் முன் நிறுத்தியது.இந்நிலையில் சத்ருகன் சின்ஹா தனியார் டிவி ஒன்றில் அளித்த பேட்டியில், “பாஜக.,வின் 80 சதவீத தொண்டர்கள் அத்வானியை ஜனாதிபதியாக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அவர் எனது நண்பர், ஆலோசகர், வழிகாட்டி, குரு. பாஜக.,வே என் முதலும் கடைசியுமான கட்சியாக இருக்கும். பாஜக.,வுக்கு நாடாளுமன்றத்தில் 2 எம்.பி.,க்கள் இருந்த நிலையில் நான் கட்சியில் சேர்ந்தேன். எனவே, கட்சியில் இருந்து விலகெல்லாம் மாட்டேன். நான் ஏன் விலக வேண்டும்?கட்சியில் நான் ஒருவன்தான், எனக்காகப் பிரசாரம் செய்ய பிரதமரையோ அல்லது வேறு எவரையுமோ அழைக்கவில்லை. என் மகள் நடிகை சோனாக்ஷி சின்ஹா கூட எனக்காகப் பிரசாரம் செய்யவில்லை. ஆனால் நான் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை சந்திக்க விரும்பினேன். அப்போது எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆனால், அவர் எனது மகன் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தினார். அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார் சத்ருகன் சின்ஹா.