‘நல்ல காலம் எப்போதுதான் பிறக்கும்? மக்கள் காத்திருக்காங்க….மோடியை கலாய்த்த சிவசேனா

First Published Sep 5, 2017, 7:27 AM IST
Highlights
bjp vs sivasena


நல்ல காலம் எப்போதுதான் பிறக்கும்? மக்கள் காத்திருக்காங்க….மோடியை கலாய்த்த சிவசேனா

பதவியேற்று 3 ஆண்டுகளுக்குப் பிறகும் மோடி அரசின் பரிசோதனை முயற்சி தொடர்ந்து நீடிப்பதாக, மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து சிவசேனா கட்சி கிண்டலடித்து உள்ளது.

பா.ஜனதாவின் நீண்ட நாள் கூட்டணி கட்சியான சிவசேனா, மத்தியிலும், மகாராஷ்டிர மாநில ஆட்சியிலும் பங்கு வகித்து வருகிறது.

இருப்பினும், பா.ஜனதாவின் தவறுகளை இடித்துரைக்க அந்தக் கட்சி தவறுவது இல்லை. மிகவும் கூர்மையான விமர்சனங்களை அந்தக் கட்சிக்கு எதிராக முன்வைப்பது சிவசேனாவின் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்தில் சிவசேனா உள்ளிட்ட எந்தக் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்கப்படவில்லை.

இதனால், பதவியேற்பு விழாவை புறக்கணித்த சிவசேனா, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி செத்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கத்திலும் பா.ஜனதா அரசு பற்றி கிண்டலடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ‘அச்சே தின்’ (நல்ல காலம் பெறக்குது) என்ற பிரதான கோஷத்தை பா.ஜனதா மக்கள் முன் வைத்து இருந்தது.

அதை குறிப்பிட்டு, ‘‘‘நல்ல காலம் பெறக்கும்’ அதிசயம் எப்போது நடைபெறும் என மக்கள் காத்து இருப்பதாக, சிவசேனாவின் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. அதில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது-

‘‘அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்வது என்பது பா.ஜனதாவின் உள் கட்சி விவகாரம் ஆகும். அதே நேரத்தில், நாட்டின் பாதுகாப்புக்கோ அல்லது வளர்ச்சிக்கோ அது பாதகமாக இருந்தால் நாங்கள் அமைதியாக இருக்க முடியாது.

மோடி அரசு, மத்தியில் 3 ஆண்டு காலம் பதவி வகித்து உள்ளது. ஆனால், அவருடைய அமைச்சரவையில் இன்னும் பரிசோதனை முயற்சி நீடித்து வருகிறது. நல்ல காலம் பிறக்கும் அதிசயத்தைக் காண மக்கள் காத்து இருக்கிறார்கள்.

நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் தேர்வு செய்தவர்கள்தான் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கை முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது.

பணவீக்கமும் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. உணவு, உடை மற்றும் உறைவிடம் போன்ற மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது.

மும்பை போன்ற நகரங்களில், பல்கலைக்கழகங்களின் எதேச்சதிகார போக்கினாலும் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளிவருவதாலும் மாணவர்கள்மிகவும் குழம்பிப் போய் உள்ளனர்.

பீகார், அசாம், ஒடிசா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெள்ளச்சேதங்களும் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பலியாவதும் அதிகரித்தவண்ணம் உள்ளது. எந்த அமைச்சரவை எந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்து உள்ளது?

ரெயில்வே அமைச்சரான சுரேஷ் பிரபு அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால், அந்தத் துறையின் அவலங்கள் குறையவில்லை. கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டம் முற்றிலும் சீர்குலைந்துவிட்டது.

இருந்தபோதும் அமைச்சர் உமாபாரதிக்கு ‘கல்தா’ கொடுக்கப்படவில்லை. அமைச்சரவை மாற்றம் என்பது பா.ஜனதா கட்சியின் அரசியல் தேவையாகும். அதற்காகவே அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது-

இவ்வாறு தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளது.

 

click me!