‘தேர்தல்களில் ஜெயிக்கலாம்; காஷ்மீரை காப்பாற்ற முடியுமா?’ பா.ஜனதா மீது சிவசேனா கடும் தாக்கு…

 
Published : Jun 19, 2017, 11:31 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
‘தேர்தல்களில் ஜெயிக்கலாம்; காஷ்மீரை காப்பாற்ற முடியுமா?’ பா.ஜனதா மீது சிவசேனா கடும் தாக்கு…

சுருக்கம்

BJP Vs Siva sena

‘தேர்தல்களில் ஜெயிக்கலாம்; காஷ்மீரை காப்பாற்ற முடியுமா?’
பா.ஜனதா மீது சிவசேனா கடும் தாக்கு…

‘‘பா.ஜனதா கட்சி தேர்தல்களில் வெற்றி பெறலாம்; ஆனால், காஷ்மீரை காப்பாற்ற முடியுமா?’’ என்று, சிவசேனா கட்சி தாக்குதல் தொடுத்துள்ளது.

கூட்டணி கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா இடையே மோதல் நீடித்து வருகிறது.

அமித்ஷாவுடன் சந்திப்பு

பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா நேற்று முன்தினம்தான் மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்துப் பேசி இருந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு கோரிய அமித்ஷாவிடம், வேட்பாளர் பெயரை அறிவித்தபின் ஆதரவு குறித்து முடிவு செய்வதாக தாக்கரே பதில் அளித்து இருந்தார்.

தாக்குதல்

இந்த நிலையில், சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகை தலையங்கத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு-

‘‘அமித்ஷா மற்றும் அவருடைய கட்சியின் எண்ணம் எல்லாம் மகாராஷ்டிராவில் திடீர் தேர்தல் நடத்துவது பற்றி உள்ளது.

காஷ்மீர் நீடிக்குமா?

ஆனால், நாங்கள் அது போன்ற இடைத் தேர்தலுக்குப் பதிலாக காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது குறித்தும் டார்ஜிலிங் வன்முறை குறித்தும் கவலை கொண்டு இருக்கிறோம்.

மகாராஷ்டிரா மாநில அரசு 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்கும் என அமித்ஷா கூறுகிறார். ஆனால், நமது காஷ்மீர் இந்தியாவின் வரைபடத்தில் நீடிக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மெகபூபா பகிரங்க ஆதரவு

ராணுவத்தினர் மீது இளைஞர்கள் நடத்தும் தாக்குதலை காஷ்மீர் முதல்-அமைச்சர் மெகபூபா முப்தி பகிரங்கமாக ஆதரிக்கிறார். காஷ்மீரின் தற்போதைய நிலைக்கு நமது ராணுவத்தினர்தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டி வருகிறார்.

சிவசேனா விவசாயிகளின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறது. இந்தப் பிரச்சினையில் தேசிய நிலைப்பாட்டை சிவசேனா எடுத்துள்ளது. இதற்காக ‘‘எங்களுக்கு பாடம் கற்பிக்க’’ முயற்சி நடைபெறுகிறது.

அரசியல் சாதகம்

ஆனால், மெகபூபாவுக்கு எதிராக பா.ஜனதா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக, அவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். மகாராஷ்டிராவுக்கு தற்போது முன்னுரிமை தேவை இல்லை. காஷ்மீரில் நிலைமை கை மீறிப்போய்க்கொண்டு உள்ளது.

டார்ஜிலிங்கில் அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள். மம்தா பானர்ஜியுடன் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக அங்குள்ள நிலைமையை தங்களுக்கு அரசியல் சாதகமாக மாற்றிக்கொள்ள யாரும் முயற்சி செய்யக்கூடாது.

காப்பாற்ற முடியுமா?

மகாராஷ்டிராவில் இடைத் தேர்தல்கள் நடைபெறலாம். தேர்தலுக்குப்பின் அவர்கள்தான் ஆட்சி அமைக்கப் போவதாகவும் அமித்ஷா கூறி வருகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் கூட நீங்களே வெற்றி பெறலாம். அனைத்து தேர்தல்களிலுமே நீங்கள் வெற்றி பெறலாம். ஆனால், காஷ்மீரை உங்களால் காப்பாற்ற முடியுமா?’’

இவ்வாறு ‘சாம்னா’ தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!