
ஜனாதிபதி தேர்தலுக்குப்பின் மத்திய அமைச்சரவை மாற்றம்?
ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17 ல் நடைபெற உள்ளதால், அதற்கு பிறகு மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாதனை அறிக்கை
இதற்கு முன்னோட்டமாக ஒவ்வொரு மாதமும் தங்கள் துறையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சாதனைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் பா.ஜ., ஆட்சியில் ஒவ்வொரு துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை, முந்தைய காங்., அரசின் 3 ஆண்டு செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு அறிக்கை அளிக்கும்படியும் மோடி, அமைச்சர்களிடம் கேட்டுள்ளார்.
மனோகர் பாரிக்கர்
மேலும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவற்றில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எவை, நிறைவேற்றப்படாதவை எவை எனவும் குறிப்பிட வேண்டும் என மோடி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மனோகர் பாரிக்கர் கோவா முதல்வரானது, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே திடீரென மரணமடைந்தது போன்ற காரணங்களால் அமைச்சரவையில் பல இடங்கள் காலியாக உள்ளன.
தேர்தலுக்கு முன்பு..
சில அமைச்சர்கள் கூடுதலாக துறைகளை கவனித்து வருகின்றனர். இதனால் பல திட்டங்கள் தேங்கிக் கடக்கின்றன. இவையும் அமைச்சரவை மாற்றத்திற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு தன்னை நிரூபித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் உடனடியாக அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது