
யாரு நம்ம அரசரா இது? என்று கேட்குமளவுக்கு விறுவிறு பாலிடிக்ஸில் குதித்திருக்கிறார் திருநாவுக்கரசர். என்னமோ ஏதோ...என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர்ந்திருந்தவர் என்னாச்சோ தெரியவில்லை மனிதர் டாப்கியரில் தடதடக்கிறார்.
இந்திராகாந்தியின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் கோயமுத்தூரில் கலந்து கொண்டு சனிக்கிழமை நள்ளிரவில் கிளம்பியவர் மறுநாள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இந்திராவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது “என்னய்யா நடக்குது இந்த நாட்டுல? தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்துறாங்க. ஆனா அந்த குண்டு எங்கேயிருந்து வந்துச்சுன்னு தெரியலைங்கிறாங்க ஒரு அம்மா. அந்தம்மாதான் இந்த தேசத்தின் ராணுவ அமைச்சர்! நீட் தேர்வு பிரச்னை சமயத்திலேயும் ‘தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.’ அப்படின்னு ஒரு பொய்யை கொளுத்திப் போட்டுட்டு போயிட்டே இருந்தாங்க. மத்திய அமைச்சர் பதவியில அதுவும் ராணுவ அமைச்சராயிருக்கிறவங்க இப்படியெல்லாம் பொறுப்பில்லாம பேசுறதா?” என்று வெடித்திருக்கிறார்.
அரசரே அப்படியே ஒரு நாலு வருஷத்தை ரீவைண்ட் பண்ணி உங்க கட்சி ஆட்சியில மத்திரிங்களா இருந்தவங்க எவ்வளவு பொறுப்பா மத்தியமைச்சர் வாழ்க்கையை வாழ்ந்திருக்காங்கன்னு புரட்டிப்பாருங்க. புண்ணாகிடும் உங்க கண்ணு!...என்று அரசருக்கு காட்ட ரியாக்ஷன் காட்டியிருக்கின்றனர் இணையதள பி.ஜே.பி.யினர்.