சட்டப்பேரவை தொடர்பான வழக்குகள்.. உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!

First Published Nov 20, 2017, 11:13 AM IST
Highlights
mla disqualification case hearing in high court


தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட சட்டப்பேரவை தொடர்பான 7 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது. 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு, குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு நோட்டீஸை ரத்து செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு, அரசியல் சாசனத்திற்கு சவால்விடும் வகையிலான வழக்குகளாக இருப்பதால் சட்டப்பேரவை தொடர்பான 7 வழக்குகளையும் கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.

தனி நீதிபதியின் கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவை தொடர்பான 7 வழக்குகளையும் கடந்த 16-ம் தேதி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும் முதல்வர் தரப்பில் வழக்கறிஞர் வைத்தியநாதனும் திமுக தரப்பில், வழக்கறிஞர் அமரேந்திர சரணும் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, சட்டப்பேரவை தொடர்பான வழக்குகளை நவம்பர் 20-ம் தேதிக்கு(இன்று) ஒத்திவைத்தது. அதன்படி, தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் இன்று விசாரிக்கப்படுகிறது.
 

click me!