
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு சசிகலா சொத்து சேர்த்திருக்கிறார் என்றால் அதற்கு முழு முதற்காரணமே ஜெயலலிதாதான் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் பழ.கருப்பையா. இவர் ஜெயலலிதா, சசிகலா மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகவும், பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிராகவும் துக்ளக் விழாவில் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதையடுத்து பழ.கருப்பையா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் தனது துறைமுகம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து திமுகவில் இணைந்த அவர், சன் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் ஏன் வருடான வரி ரெய்டு நடத்தக் கூடாது என கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா தெய்வமாக பூஜிக்கப்பட வேண்டியவர் என்றால் அவர் ஏன் ஊழல் வழக்கில் சிறை சென்றார் என தெரிவித்தார். ஜெயலலிதாவை தூய்மையானவர் என்று யாராவது சொன்னால் அவர்கள் கோமாளிகள் என்றும் அவர் கூறினார்.
சசிகலா குடும்பத்தினர் கையில் தற்போது இரண்டரை லட்சம் கோடி ரூபாய் உள்ளது, இது தொடர்பான விசாரணை வளையத்தில் சசிகலா, அவரது குடும்பத்தினர், அ.தி.மு.க. அரசு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் , அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகிய அனைவரையும் கொண்டு வர வேண்டும் என தடாலடியாக தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குகூட தகுதியற்றவர்கள் என பழ.கருப்பையா தெரிவித்தார்.
எப்படியும் சசிகலா கையில் பல லட்சம் கோடி ரூபாய் பணம், சொத்து கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும், ஆனால் சசிகலா சேர்க்க காரணமானவர் ஜெயலலிதா தான் பகிரங்கமாக தெரிவித்தார்.
சசிகலாவிடம் உள்ள ரூ.2.5 லட்சம் கோடி பணத்தில் ரூ.1 லட்சம் கோடியை வைத்து தமிழக அரசின் கடனை அடைக்கலாம்.,,,மீதமுள்ள பணத்தில் ஓராண்டுக்கு வரியே போடாமல் தமிழக அரசை நடத்தலாம் என்றும் பழ.கருப்பையா தெரிவித்தார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மூலம் தமிழகத்தில் போட்டி ஆட்சியை மோடி நடத்தி வருகிறார் என குற்றம்சாட்டிய பழ.கருப்பையா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த கடிதத்தின் மீது கவர்னர் பன்வாரிலால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் . அதை விட்டு விட்டு ஆளுநர் ஆய்வு நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறினார்.