
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை எப்பாடு பட்டாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று தவியாய் தவிக்கிறது பாஜக.
ஆனாலும் பணப்பட்டுவாடா குறித்த ஆதாரங்களை திரட்ட முடியாமல் அக்கட்சி தவித்து வருகிறது.
தம் மீதுள்ள வழக்குகளுக்கு தண்டனை கிடைப்பதற்குள், ஆர்.கே.நகர் இடை தேர்தலில் ஜெயித்து விட்டால் தமக்கு பாதுகாப்பு என்று நினைக்கிறார் தினகரன்.
ஆனால், தினகரனுக்கு தண்டனை கிடைத்து அவரை தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்வதற்காக, பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தலை நிறுத்த முனைகிறது பாஜக.
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து, தேர்தல் ஆணையத்திற்கு எதிர்க்கட்சிகள் புகார் மேல் புகார் அனுப்பி வருகின்றன.
ஆனாலும், புகாருக்கான ஆதாரங்கள் எதுவும் அளிக்கப்படாததால், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ஆர்.கே. நகரில் கண்ணுக்கு தெரியாமல் பணப்பட்டுவாடா நடக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தலை நடத்தி பயனில்லை.
வேட்பாளர்கள் வரவேற்பையே பணம் கொடுத்து தான் செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் கூறி உள்ளார்.
ஆதாரம் இல்லாமல் என்னதான் கத்தினாலும், பயனில்லை என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, பாஜக வின் முயற்சி பலிக்குமா? என்பது இனிதான் தெரியவரும்.