
கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை உடைத்து எப்படியாவது ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறது பாஜக. அதற்கான முயற்சியில் இறங்கியுள்ள அக்கட்சி மேலிடத் தலைவர்களை இறக்கியுள்ளது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க போதிய எண்ணிக்கையான 113 ஐ பெறவில்லை. 104 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இந்த நிலையில் மேலும் தேவைப்படுவது 9 எம்எல்ஏக்கள்தான்.
இந்தியாவைப் பொறுத்தவரை தென் மாநிலங்களைத் தவிர வடகிழக்கு பகுதிகள் முழுக்க பாஜகவின் ஆட்சி அதிகாரத்திற்குள் வந்தபோதும், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டுமே இதுவரை பாஜகவால் நுழைய முடியவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் சில மாதங்கள் ஆட்சி அதிகாரத்தில் பாஜக இருந்ததால் இந்த தேர்தலில் எப்படியாவது வென்று தென் மாநிலத்தில் தனது கணக்கைத் தொடங்க பாஜக பக்காவாக பிளான் போட்டிருந்தது.
பிரதமர் மோடி, அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் என அனைவரும் களம் இறங்கி தேர்தலில் வேலை பார்த்தனர். ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.
இதையடுத்துதான் அமித் ஷா வடக்கிலிருந்து பெரும் தலைகளை களத்தில் இறக்கிவிட்டுள்ளார்.
இதனை விடக்கூடாது எனவும், இதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் பாஜக இறங்க வேண்டும் என டெல்லியில் இருந்து அறிவிப்பு வர, தற்போது குதிரை பேர பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற 37 பேரில் 15 பேரை வளைக்க பலகட்ட முயற்சிகளை தொடங்கியிருக்கிறார்கள் எனவும், அதன்படி ஒரு எம்எல்ஏவின் தலைக்கு 50 கோடி ரூபாய் என தொடக்க பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக போய்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மதசார்பற்ற ஜனதா தளத்தின் 37 பேரில் 3ல் ஒரு பங்கு இழுத்துவிட்டால் அவர்களை தனிக்கட்சியாக்கி, பாஜகவுக்கு ஆதரவு நிலையை ஏற்படுத்தலாம் என்று அக்கட்சி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குதிரை பேரம் படியுமா? மஜத எம்எல்ஏக்கள் சிக்குவார்களா ?