சிக்கன் ரைஸுக்காக அமித்ஷா பி.ஏ.,வுக்கு போன்... மதக்கலவரத்தை தூண்டுவதாக மிரட்டிய பாஜக..!

By Thiraviaraj RMFirst Published Jan 13, 2021, 4:55 PM IST
Highlights

சிக்கன் ரைஸுக்கு பணம் கேட்டதால் கடை உரிமையாளர் மற்றும் தடுக்க வந்த போலீசாருக்கு மிரட்டல் விடுத்து பேசும் திருவல்லிக்கேணி பாஜக பிரமுகரின் மிரட்டல் வீடியோ இணைதளத்தில் வைரலாகி வருகிறது. அமித்ஷா உதவியாளருக்கு போன் போடவா..? ஆயிரம் பேரை இறக்குவோம் என பேசுவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கன் ரைஸுக்கு பணம் கேட்டதால் கடை உரிமையாளர் மற்றும் தடுக்க வந்த போலீசாருக்கு மிரட்டல் விடுத்து பேசும் திருவல்லிக்கேணி பாஜக பிரமுகரின் மிரட்டல் வீடியோ இணைதளத்தில் வைரலாகி வருகிறது. அமித்ஷா உதவியாளருக்கு போன் போடவா..? ஆயிரம் பேரை இறக்குவோம் என பேசுவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் பாஜக பிரமுகர் ஒருவர் மிரட்டும் சம்பவம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் திருவல்லிக்கேணி பாஜக பகுதி செயலாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்த நபர், கடை உரிமையாளர் மற்றும் அவரை தடுக்க வந்த போலீசாரையும் ஆபாச வார்த்தைகளால் பேசி மிரட்டும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சம்பந்தப்பட்ட நபரை சமாதானப்படுத்தி அங்கிருந்து புறப்பட சொல்லும் போலீசாருக்கும், அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அதற்கு அந்த நபர், நான் ஒன்றும் பெரிய ஆள் எல்லாம் இல்லண்ணா.. இந்த திருவல்லிக்கேனி பாஜகவின் பகுதி செயலாளர் நான்.  சாதாரண ஆள் தான் என கிண்டலடிக்கும் வகையில் பேசுகிறார்.

அப்போது போலீஸ்காரர், ‘அவரை இப்போது அவரை அனுப்பி விடுங்கள் காலையில் பார்த்துக் கொள்ளலாம்’என்று கடை உரிமயைாளரிடம் சொல்கிறார். அதற்கு கடை உரிமையாளர், ‘இப்படி செய்தால் நாளை இங்கு நான் ஓட்டல் நடத்த முடியாது’என்கிறார். அதை கேட்ட உடன் மீண்டும் அந்த நபர் திரும்பி வந்து, ‘நாளை எப்படி இந்த ஓட்டல் நடக்கும்... மதக்கலவரம் நடக்கும்’என்று போலீசார் முன்னிலையில் மிரட்டுகிறார்.

அருகில் இருந்த அந்த நபரின் நண்பரை பார்த்து கையை காட்டி, ‘இவன் இந்து முன்னணி ஆள், நான் பாஜக ஆள். அவனை நான் இப்போது கண்ட்ரோல் பண்ணி ஆப் பண்ணி வைச்சிருக்கேன்’என்று மீண்டும் மிரட்டுகிறார். அங்கிருந்த போலீசார் மீண்டும் அந்த நபரை சமாதானம் செய்கிறார்.  ஆனால் அவர், பாஜக ஆளுக்கு ஒரு மரியாதை இல்லையா? என்று போலீசாரிடம் கேட்கிறார். ஒரு கட்டத்தில் டென்ஷனான போலீசார் இங்கிருந்து புறப்பட போகிறாராயா இல்லையா? என்கின்றனர்.

உடனே, ‘உங்க பேச்சுக்கு மரியாதை கொடுத்து செல்கிறேன்’என்கிறார். ஆனால் கடை உரிமயைாளர், ‘சிக்கன் ரைஸுக்கு பணம் கொடுத்துவிட்டு அனுப்புங்கள்’என்கிறார். உடனே டென்ஷனாகும் அந்த நபர், ‘என்னை பார்த்து அந்த கடைக்காரன் நக்கலா பேசுறான். என்று மீண்டும் சண்டைக்கு செல்கிறார். ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டே அந்த நபர், ‘அமித்ஷா பி.ஏ.,வுக்கு போன் அடிச்சிறுவேன்... கலவரம் ஆகிவிடும்... ஆயிரம் பேர் ரெடியா இருக்காங்க’என்று மிரட்டுகிறார். நீங்க வீடியோ எடுக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார். அத்துடன் வீடியோ முடிகிறது.

பாஜக பிரமுகரின் இந்த மிரட்டல் சம்பவம், சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு மது போதையில் பணம் தர முடியாது என்று திருவல்லிக்கேணியில் உள்ள கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
 

click me!