தீவிரவாதத்திற்கு தீனி போடும் பாஜக... டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Aug 5, 2019, 6:07 PM IST
Highlights

நிலையற்ற சூழல் உருவாவதற்கே வழிவகுக்கும். உலகளவில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும்.
 

காஷ்மீர் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பை நடத்தி மத்திய அரசு முடிவை அறிவித்திருக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.


 
காஷ்மீரில் நிலவும் பெரும் பதற்றத்துக்கு மத்தியில் அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பு சாசன பிரிவு 370-யை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதனால் காஷ்மீரில் பதற்றம் மேலும் அதிகரித்திருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக, இந்த விவகாரம் என்பது மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயல் என்று கூறியுள்ளது. 

தமிழகத்தை ஆளும் அதிமுக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை வரவேற்றுள்ளது. இந்த நிலையில் அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பதிவில், ‘ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 மற்றும் 35-ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டதை, மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தி மத்திய அரசு முடிவு செய்திருக்க வேண்டும். 

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பிலிருந்தே நீடித்து வரும் காஷ்மீர் பிரச்சினையில் அங்கு வாழும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டியது அவசியம். அரசின் இந்த நடவடிக்கை ஏற்கனவே பதற்ற பூமியாக இருக்கும் காஷ்மீர் பகுதியில் தீவிரவாதத்திற்கு மேலும், தீனிபோடும் வகையில் அமைந்து, நிலையற்ற சூழல் உருவாவதற்கே வழிவகுக்கும். உலகளவில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும்.

இந்தச் செயல்பாடுகள் மூலம், ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு குறிப்பாக அங்கு அதிகம் வசிக்கும் சிறுபான்மை மக்களுக்கு எந்தவித பாதிப்பும், அச்சுறுத்தல்களும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமை’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!