அப்படித்தான் பேசுவோம்.. என்ன பண்ண முடியும் உங்களால ? நிருபரை அட்டாக் செய்த அண்ணாமலை

By Raghupati RFirst Published Jan 3, 2022, 8:19 AM IST
Highlights

‘உங்களுக்கு பிடிச்சா இந்த வீடியோவ போடுங்க, இல்லைனா உங்க சேனல்ல வீடியோவை எடிட் பண்ணி குப்பைல போடுங்க. இப்படித்தான் நாங்க பேசுவோம்’ என்று நிருபரிடம் எகிறி அடித்திருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

நாகர்கோவிலில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘ஒவ்வொரு மாநிலத்துக்கும் பலகட்டமாக பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. டிசம்பர் 31-ந் தேதியன்று ரூ.3 ஆயிரத்து 331 கோடிக்கான பேரிடர் நிவாரண நிதி 6 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன. இது கடந்த 2021-ம் ஆண்டு மே வரை நடந்த பேரிடருக்கானது. அதன் பிறகு நடந்த பேரிடர்களுக்கு அடுத்த கட்டத்தில் நிவாரணம் வழங்கப்படும். தமிழகத்துக்கு மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் எஸ்.டி.ஆர்.எப். திட்டத்தின் மூலம் பேரிடர் நிதி வழங்கப்படுகிறது. 

அதற்கான 75 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் மாநில அரசு ஒதுக்கவில்லை. பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் டெல்டா பகுதியில் ஒரு விவசாயி கூட பணம் வரவில்லை என சொல்ல முடியாது. பிரதமர் மோடி வந்த பிறகு டெல்டா பகுதியில் 100 சதவீதம் பயிர் காப்பீடு செயல்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு ஒரு கருத்தை பதிவிடுவதற்கு முன்பு அதனை நன்கு ஆராய்ந்து, தெளிவாக அறிந்து புரிந்து பதிவிட வேண்டும். 

 

Great sir
pic.twitter.com/rtVFWyh8AC

— Ananda Priya (@APriya_Official)

மேலும் அவர் கண்ணாடி முன்பு நின்று சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு படிக்கல்லாக இருக்கிறது. தி.மு.க. அரசு ஆட்சியில் இல்லாத போது தடுப்பூசி போடாதீர்கள் என்றார்கள். இப்போது தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொடுக்கிறது என டி.ஆர்.பாலு சொல்கிறார். எனவே டி.ஆர்.பாலுவுடன், அமைச்சர் சேகர் பாபு கலந்து பேசிவிட்டு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். 

பா.ஜனதாவை சேர்ந்த 24 பேர் மீது தி.மு.க.வினர் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் கைது செய்கிறார்கள். தமிழக போலீசாருக்கு என தனித்துவம் வாய்ந்த கம்பீரம் உள்ளது. அந்த கம்பீரத்தை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காதீர்கள். அதனால் தான் தமிழக போலீசார் கடமை தவறாமல் செயல்பட வேண்டும் என டி.ஜி.பி அறிக்கை வெளியிட்டுள்ளார். டி.ஜி.பி.யின் அறிக்கையை நான் வரவேற்கிறேன்’ என்று கூறினார்.

சன் டிவி நிருபர் கேட்ட கேள்விக்கு சரமாரியாக நிருபரிடம் கேள்வி எழுப்பினார் அண்ணாமலை. ‘ஒரு விஷயம் நீங்க புரிஞ்சுக்கணும். நீங்களே உங்க டிவில விவாதம் வைங்க. நான் கலந்துக்குறேன். என்னை விட்டுடுங்க, நீங்க கேள்வி அடையாளப்படுத்தி கேட்டா, நானும் அடையாளப்படுத்துவேன். உங்களுக்கு பிடிச்சா போடுங்க, இல்லைனா உங்க சேனல்ல வீடியோவை எடிட் பண்ணி குப்பைல போடுங்க. நான் சொன்னதுல பொய்யா இருந்தா என்ன கேள்வி கேளுங்க. இப்படித்தான் நாங்க பேசுவோம். 

பயந்துகிட்டேலாம் ப்ரஸ் மீட் கொடுக்கமுடியாது. எப்பொழுது நேர்மையாக நாணயமாக தமிழ்நாட்டுல இருக்குற தொலைக்காட்சிகள் எப்பொழுது மாறுகிறதோ அப்பொழுது எங்கள் பேச்சும் மாறும். இது எங்களது நிலைப்பாடு மட்டுமல்ல, பொதுமக்களின் நிலைப்பாடும் அதுவே’ என்று அண்ணாமலை கூற பாஜவினர் கைதட்டி உற்சாகம் செய்தனர். அண்ணாமலை நிருபரிடம் சரமாரியாக கேள்வி கேட்ட இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

click me!