காத்திருந்தது எல்லாம் வீண்... இனி அதிமுகவுடன் கூட்டணி இல்லை.? முடிவுக்கு வந்தது பாஜகவின் ரகசிய பேச்சுவார்த்தை

By Ajmal Khan  |  First Published Feb 22, 2024, 10:37 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இறுதிவரை அதிமுக பிடி கொடுக்காத காரணத்தால் அதிமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை பாஜக நிறுத்தியுள்ளது. இனி பாஜக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக- பாஜக இடையிலான கூட்டணி கடந்த 4 வருடங்களுக்கு மேல் தொடர்ந்தது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2021ஆம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலிலும் இரண்டு கட்சியும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது.

Latest Videos

undefined

ஆனால் இரண்டு தேர்தல்களிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் தோல்வியே கிடைத்தது. இதனால் இர தரப்புக்கும் இடையே உள்ளுக்குள் மோதல் ஏற்பட்டது.  இந்த சூழ்நிலையில் அதிமுக மூத்த தலைவர்களான அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்தது.

பாஜகவுடன் கூட்டணியை முறித்த அதிமுக

இதற்கு அதிமுகவினர் பதிலடி கொடுத்து அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்தனர். பாஜக தேசிய தலைமையிடமும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் தேசிய தலைமையோ அண்ணாமலை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக தலைமை அதிரடியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக துணையோடு வெற்றி பெற்று விடலாம் என்ற பாஜகவின் திட்டத்தில் பின்னடைவை சந்தித்தது. இருந்த போதும் பாஜக தேசிய தலைமை அதிமுக தலைமை கழக நிர்வாகிகளோடு மீண்டும் கூட்டணி தொடர்பாக ரகசிய பேச்சு நடத்தியது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லையென அறிவித்துவிட்டது.

புதிய கூட்டணியை அமைக்க பாஜக தீவிரம்

இருந்த போதும் அதிமுக- பாஜக கூட்டணியை சேர்க்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரு தரப்பையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி என்பதை திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் அதிமுக இல்லாமல் புதிய கூட்டணியை அமைக்க பாஜக தற்போது முடிவு செய்துள்ளது. இனி அதிமுகவின் கூட்டணிக்காக காத்திருக்க வேண்டாம் என்றும், புதிய கூட்டணியை அமைக்கலாம் என நிலைப்பாடு எடுத்துள்ளது.

அந்த வகையில், அமமுக, ஓபிஎஸ், தமாகா, பாரிவேந்தர், ஏசி சண்முகம் உள்ளிட்டவர்களை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க பாஜக முடிவு செய்துள்ளது.மேலும் தங்கள் கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிகவை இணைக்கவும் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாகவும் பாஜக ரகசிய பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது.   

இதையும் படியுங்கள்

திமுகவின் வெற்றி வாய்ப்பு.? கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி என்ன.? மா.செயலாளர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

click me!