திமுகவின் வெற்றி வாய்ப்பு.? கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி என்ன.? மா.செயலாளர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

By Ajmal Khan  |  First Published Feb 22, 2024, 9:51 AM IST

நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள இடங்கள் மற்றும் திமுக வேட்பாளர் பற்றி ஆலோசிக்க மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்திற்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.


நாடாளுமன்ற தேர்தல்- சூடு பிடிக்கும் அரசியல் களம்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி முறிந்துள்ள நிலையில், இரண்டு கட்சிகளும் தங்கள் தலைமையில் புதிய கூட்டணி அமைக்க திட்டமிட்டு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படவுள்ளது.

Tap to resize

Latest Videos

திமுக- அதிமுக கூட்டணி.?

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 8 முதல் 10 தொகுதியும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா இரண்டு தொகுதியும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களை கேட்பதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி சார்பாக ஒதுக்கப்படும் இடங்களில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக திமுக கூட்டணியிலும் குழப்பம் நீடிக்கிறது, மேலும் விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், தற்போது தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதன் காரணமாகவும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு

இந்த பரபரப்பான சூழ்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை(23.02.2024) முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு, வெற்றி வாய்ப்பு நிலவரம் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார்... 5 அமைச்சர்களுக்கு தீர்ப்பு காத்துள்ளது- திமுகவிற்கு ஷாக் கொடுத்த அண்ணாமலை

click me!