
ஆர்.கே.நகரில் நடைபெற்றது தேர்தலே இல்லை எனவும் அதை பற்றி பேசவே தேவை இல்லை எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகின்றது.
சசிகலாவே அடுத்த சி.எம் என கூறி வந்த அனைவரும் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கி அவரை கட்சியில் இருந்து கழட்டி விட்டனர். டிடிவியை கட்சி உறுப்பினரே இல்லை என கூறி ஓரங்கட்டினர் ஆளுங்கட்சியினர்.
இதையடுத்து தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலையையும் கட்சியையும் எடப்பாடி பன்னீர் செல்வம் மீட்டனர்.
இதையடுத்து நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
இதைதொடர்ந்து இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் 5வது சுற்றின் முடிவில் 13,863 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார்.
மதுசூதனன் 13, 057 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் திமுக 6,606 வாக்குகள் பெற்று 3 வது இடத்திலும் நாம் தமிழர் கட்சி 1245 வாக்குகள் பெற்று 4 இடத்திலும் உள்ளது.
மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 318 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆர்.கே.நகரில் நடைபெற்றது தேர்தலே இல்லை எனவும் அதை பற்றி பேசவே தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பணப்பட்டுவாடா நடக்கிறது என்று நானும் எங்களது வேட்பாளரும் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டுதான் இருந்தோம் எனவும் அதற்கு யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.