
அதிமுகவின் தொலைக்காட்சியாக ஜெயா டிவி இருந்து வந்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, டிடிவி தினகரன் அணியை ஆதரித்து வந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக, அணிகளாக பிளவுபட்டது. இதன் பின்னர், அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சி தலைவி அணி என அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு நடைபெற்றன. டிடிவி தினகரன்
தனித்து விடப்பட்டார்.
ஜெ. மறைவுக்குப் பிறகு அதிமுக நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆரும், ஜெயா தொலைக்காட்சியும் சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை, ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்., அணிகளுக்கு ஒதுக்கப்பட்டது.
ஆர்.கே.நகர் தொகுதியில், இடைத்தேர்தல் நடத்தப்பட்டு தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டிடிவி தினகரன் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார்.
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல், இடைத்தேர்தலாக இருந்தபோதும், தமிழக மக்கள் அதனை பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். பண புகார் காரணமாக கடந்த மார்ச் நடைபெறவிருந்த இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டு, இந்த மாதம் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று, நான்கு மற்றும் ஐந்தாவது வாக்கு எண்ணிக்கையில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறார்.
தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றி குறித்து டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் நான் முன்னிலை வகித்து வருவது மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டார்.
அப்போது, அங்கு குழுமியிருந்த தினகரன் ஆதரவாளர்கள், புதிய கோஷம் ஒன்றை எழுப்பினர். அப்போது சிலர் வாழும் எம்.ஜி.ஆர்., டிடிவி என்ற புதிய கோஷத்தை எழுப்பினர். இதனை அடுத்து, தினகரனும், தங்க தமிழ்செல்வனும் ஆதரவாளர்களை அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டனர்.