
நாட்டில் உள்ள 31 மாநிலங்களில் 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது, இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுவதாக கூறப்படுகிறது. இன்று வெளியான 5 மாநில தேர்தல் முடிவில் பஞ்சாப்பை தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மோடி தலைமையிலான ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் தற்போது பின்னோக்கி செல்லும் நிலையில்தான் உள்ளது. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல்வேறு மாநிலங்களை இழந்து வருகிறது, விரைவில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முன்னோட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. பாஜகவின் வெற்றி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 5 மாநிலத்தில் 4 மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றி மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஒருமித்து பயணிப்போம் என்ற வார்த்தையை பதிவு செய்துள்ளதாக கூறினார். உத்தரபிரதேசத்தில் இதுவரை இல்லாத வகையில் 33 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக ஒரு கட்சி ஆட்சியை பிடித்துள்ளதாக தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் மாற்றம் வரப்போவதாக எதிர்கட்சிகள் கூறிவந்த நிலையில் தற்போது பாஜகவே வெற்றி பெற்றுள்ளதாக கூறினார்.
கொரோனாவால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களை பாதுகாக்க பிரதமர் எடுத்த நடவடிகைக்கு கிடைத்த வெற்றி என கூறினார். நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்து வருவதாக தெரிவித்தவர், காங்கிரஸ் ஆளும் மீதமுள்ள இரண்டு மாநிலங்களிலும் பாஜக விரைவில் கைப்பற்றும் என கூறினார். நாடாளுமன்றத்தோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வந்தால் மணிப்பூர், கோவாவை போல தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என கூறினார். கோவாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளதாக தெரிவித்தவர், இது தமிழகத்திலும் நிகழும் என தெரிவித்தார்.