கருப்பர் கூட்ட கும்பலை கைது செய்ய பாஜக ஆர்பாட்டம்...!! எல். முருகன், காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் ஆக்ரோஷம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 16, 2020, 4:30 PM IST
Highlights

தமிழ்  கடவுள் முருகரின் படத்தை வைத்து பூசைசெய்து, கந்தசஷ்டிகவசம் ஓதப்பட்டு ஆர்ப்பாட்டம் துவங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டிக் கவசத்தையும் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வாயிலாக  கேவலப்படுத்தியும், இழிவுபடுத்தியும் காணொளி வெளியிட்ட சுரேந்திர நடராஜனையும் அவருக்கு துணையாக இருந்தவர்களையும்  கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் எல். முருகன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே கட்சி தொண்டர்களுடன் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. கந்த சஷ்டி கவசம் குறித்தும், முருகப்பெருமான் குறித்தும் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வெளியான வீடியோ பாஜகவினரையும், இந்து அமைப்புகளையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த சேனலை முடக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரி வருகின்றன. மேலும் கந்த சஷ்டி கவசம் பற்றி கொச்சையாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

இதற்காக  கருப்பர் கூட்டம் யூடியுப் சேனல் மீது சென்னை மாநகர  காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது குறித்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கோடிக்கணக்கான மக்களின் இந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில், முருக பக்தர்களை அவமானப்படுத்தும் நோக்கில் சுரேந்திர நடராஜன் போன்ற கும்பல், கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில்  திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. எனவே சுரேந்திரன் நடராஜன் போன்ற கபடதாரிகளை கண்டித்தும் , இவரை தேசத்துரோக வழக்கு மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு முன்பாக வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு முருகப்பெருமான் படத்துடன், கையில் கொடியுடன் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறவழி கண்டன போராட்டம் நடத்த வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார். 

அதேபோல், தானும் தனது வீட்டிற்கு முன்பாக அறவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் திட்டமிட்டபடியே இன்று காலை 10:30 மணி அளவில் தமிழக பாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் கோயம்பேட்டில் உள்ள எஸ.எப்.ஏ குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தின் வெளியே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தமிழ்  கடவுள் முருகரின் படத்தை வைத்து பூசைசெய்து, கந்தசஷ்டிகவசம் ஓதப்பட்டு ஆர்ப்பாட்டம் துவங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது மாநில தலைவர் எல். முருகன் அவர்களுடன் மாநில துணைத்தலைவர் எம். என் ராஜா, மாநில கலை கலாச்சாரப் பிரிவு தலைவர் திருமதி காயத்ரி ரகுராம் இன்னும் பிற மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கருப்பர் கூட்டம் யூடியும் சேனலின் சுரேந்திரன் நடராஜன் புதுச்சேரியில் உள்ள அரியாங் குப்பம் காவல் நிலையத்தில் சரண்டைந்துள்ளார். 

 

click me!