
பாஜக, கடந்த சட்டமன்ற தேர்தல் வரை எவ்வளவோ முயற்சி செய்தும், அதிமுக, திமுக ஏன் தேமுதிக கூட, கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்றோ, பாஜகவே தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும் நிலையில் உருவெடுத்துள்ளது.
பாஜகவை பொறுத்தவரை, தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாக்கு வாங்கி இல்லை என்றாலும், வாக்கு வாங்கி உள்ள கட்சிகளை வளைக்கும் அதிகாரமும், சாதுர்யமும் அதனிடம் உள்ளது.
அதனால், தமிழகத்தின் அடுத்த தேர்தலில் கூட்டணியை நிர்ணயிக்கும் சக்தி பாஜக வசமே உள்ளது. எனவே, பாஜகவின் அசைவுக்கு ஏற்பவே, தமிழகத்தில் அதன் கூட்டணியும், எதிர் கூட்டணியும் அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக வை காலூன்ற வைக்க, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் எடுத்த முயற்சிகள் பெரிய அளவில் பயன் தரவில்லை. அதனால், வலுவான ஒரு கூட்டணியை உருவாக்கி, அதன்மூலம் சில இடங்களை தக்க வைத்து கொள்ளும் முயற்சியில் அவர்கள் உள்ளனர்.
குடியரசு தலைவர் தேர்தல் முடிந்தவுடன், தமிழகத்தில் இப்போது உள்ள ஆட்சியை களைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ள பாஜக, அதற்குள் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
அதிமுக பிளவு பட்டுள்ள நிலையில், திமுக என்பது வலுவாக இருந்தாலும், அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பதை பாஜக மூத்த தலைவர்கள் யாரும் விரும்பவில்லை.
அதனால், பன்னீர்ச்செல்வத்திற்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, பெரும்பாலான அதிமுக தொண்டர்களின் வாக்குகளை பெறலாம் என்பது பாஜகவின் திட்டம்.
மேலும், அந்த கூட்டணியை மேலும் வலுவாக்கும் வகையில், பாமக, மதிமுக போன்ற கட்சிகளையும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காகவும் பாஜக தலைவர்கள் பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டனர்.
கடந்த தேர்தலில் விழுந்த அடியால், இனி தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற மனநிலையிலேயே பாமக தலைவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், ஸ்டாலினின் கட்சி கரைப்பு நடவடிக்கைக்கு, பதிலடி கொடுக்க பாஜக கூட்டணியே பாதுகாப்பாக இருக்கும் என்று, வைகோவும் கருதுவதாக சொல்லப்படுகிறது.
அதே சமயம், தேமுதிக முக்கிய பிரமுகர்களை கட்சியில் இருந்து இழுத்து பலவீனப்படுத்திய ஸ்டாலினுக்கு எதிர் அணியில்தான் இருக்க வேண்டும் என்று தேமுதிக வும் எண்ணுவதால், அந்த கட்சியும் பாஜக கூட்டணிக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, கடந்த 2014 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கூட்டணியில் இடம் பெற்ற முக்கிய கட்சிகள் அனைத்தும், தற்போது பாஜக உருவாக்கும் கூட்டணியில் இடம்பெறும் என்றே சொல்லப்படுகிறது. கூடுதல் வரவாக, தமாகா வும் இதில் இடம் பெற உள்ளது.
அதே சமயம், பாஜக கூட்டணியை சமாளிக்கும் வகையில், திமுக தரப்பிலும் வலுவான கூட்டணியை கட்டமைக்கும் முயற்சியும் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், விடுதலை சிறுத்தைகள், இடது சாரிகள், சில முஸ்லீம் அமைப்புகள் திமுகவுடன் இணக்கமாக உள்ளன. இந்த கட்சிகளை ஒன்று சேர்த்து கூட்டணியை வலுவாக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், எடப்பாடி தலைமையிலான அதிமுக என்ன செய்யப்போகிறது ?என்று இதுவரை தெரியவில்லை. எனவே, கூட்டணி குறித்த இறுதி முடிவுகள், குடியரசு தலைவர் தேர்தல் முடிந்த பின்னரே தெளிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.