நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
சூடு பிடிக்கும் தேர்தல் களம்
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என அரசியல் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிரமாக சுற்றி சுற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக தனி அணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதன் காரணமாக பாஜகவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் குவியும் பாஜக தலைவர்கள்
இந்தநிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன் படி இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரம் செய்யவுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைமை பிரச்சார சுற்றுப்பயண அட்டவணையை வெளியிட்டுள்ளது.
முதல் நிகழ்ச்சியாக காலை 10 மணிக்கு சிதம்பரம் தொகுதி வேட்பாளர் பி கார்த்தியாயனி ஆதரித்து அரியலூரில் உள்ள அம்னி பாத் பஸ் நிலையம், ஆர் டி சி கிரவுண்ட், செந்துறை ரோடு, கொல்லாபுரம் அருகில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கரூர் பாராளுமன்ற வேட்பாளர் வி வி செந்தில்நாதனை ஆதரித்து கரூர் கோவை ரோடு, பிரேம் மஹாலில் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேபி நட்டா சூறாவளி சுற்றுப்பயணம்
மூன்றாவது நிகழ்ச்சி விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து திருமங்கலம் ரவுண்டானா ராஜாஜி சிலை அருகாமையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். நான்காவது நிகழ்ச்சியாக திருச்சி பாராளுமன்ற வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை நடைபெறும் ரோட் ஷோவில் பங்கேற்கிறார் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்