திமுக அரசின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு... தடாலடியாக வரவேற்ற பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்..!

By Asianet Tamil  |  First Published Jun 13, 2021, 9:40 PM IST

தமிழகத்தில் பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்ற திமுக அமைச்சரின் அறிவிப்புக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
 


திமுக அரசு அமைந்தது முதல் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான நடவடிக்கைகள் 100 நாட்களில்  மேற்கொள்ளப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதேபோல, “தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். பெண்கள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்கும் தனி பயிற்சி கொடுக்கப்படும்.” என்றும் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
அமைச்சர் சேகர்பாபுவின் இந்த அறிவிப்புக்கு கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ட்விட்டர் பதிவில் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதில், ‘விஷ்வ ஹிந்து பரிஷத், பல்லாண்டுகளாக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்துக்கொண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முழுமையாக இப்பணியில் துணை நிற்கிறது. தீண்டாமை ஒழிப்பை வெற்று முழக்கமல்லாது வாழ்க்கை முறையாகக் கொண்டது சங்க குடும்பம்( Sangh Pariwar). பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வழங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது.
காரைக்காலம்மையார் பெயரில் பயிற்சிப் பள்ளி துவங்கவேண்டும். கோயில் நிர்வாகம், பக்தர்கள் ஒத்துழைப்பு, முறையான பயிற்சி என ஆக்கப்பூர்வமாக முன்னெடுக்க வேண்டும். பெண்கள் அர்ச்சகராக மேல்மருவத்தூர் போன்ற பல்வேறு கோயில்களில் சேவையாற்றிக் கொண்டுள்ளனர். கோவை பேரூர் ஆதீனம் போன்ற பழமையான ஆதீனங்கள் பெண்களுக்கு ஆன்மீக பயிற்சி அளித்து கோயில் நிகழ்வுகளை நடத்த ஊக்கமளிக்கிறார்கள். ஹிந்து மரபில் பெண்களுக்கான ஆன்மீக தளம் பெருமளவு அனுசரணை கொண்டது” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

click me!