
பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணத்தை நிச்சயித்து விட்டால், லவ் ஜிகாத்தைத் தவிர்க்கலாம் என்று மத்தியப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ கோபால் பார்மர் சூப்பரான ஐடியா ஒன்றை சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய கோபால் பார்மர், திருமண வயது ‘18’ என்ற ‘நோய்’ வந்ததுதான், பெண்கள் ஆண்களை காதலித்து ஓடுவதற்கு காரணமாகி விட்டது என்று தெரிவித்தார்.
இதனால்தான் இஸ்லாமிய ஆண்கள் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களை ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் காதலித்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றுகின்றனர்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபோன்ற லவ் ஜிகாத்நடவடிக்கைகளைத் தடுக்க பெண்களுக்குச் சிறு வயதிலேயே திருமணத்தை நிச்சயிக்க வேண்டும்; நம் முன்னோர்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டதால்தான், அவர்களின் திருமணம் வாழ்க்கை இறுதி வரை நீடித்தது” என்றும் அவர் கூறியுள்ளார்.
குழந்தை திருமணத்தைத் தடுக்க வேண்டும் என்று வலுவான குரல் எழுந்து வரும் காலத்தில், மத்தியப் பிரதேசத்தின் ஆக்ரா மால்வா தொகுதி எம்எல்ஏ-வான கோபால் பார்மர், “சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்வதன் மூலம், பெண்கள் தவறான வழியில் செல்வதை தடுக்கலாம்” என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.