எல்லாத்தையும் சொல்லியே ஆகணுமா..? கடுப்பான பொன்.ராதா.. பாஜக - அதிமுக கூட்டணியில் விரிசலா..?

By Raghupati RFirst Published Jan 29, 2022, 10:26 AM IST
Highlights

பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசிய சர்ச்சை பேச்சால் அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற நிலை உருவாகி இருக்கிறது.

தஞ்சாவூர் மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தில் ஆண்மையோடு முதுகெலும்போடு தைரியமாக பேசக்கூடிய ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வைக்கூட நாம் பார்க்க முடியவில்லை என்று பேசினார். நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு அதிமுகவினர் பலரும் கடுமையாக பதிலடிகொடுத்தனர். 

பின்னர், நயினார் நாகேந்திரனின் பேச்சு குறித்து அவரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலையும் விளக்கம் அளித்தார். நயினாரின் பேச்சு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசிவிட்ட தாகவும், நயினார் நாகேந்திரன் பேசியபோது ஒரு வார்த்தை தவறாக வந்துவிட்டதாகவும் இதை பெரிது படுத்த வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பேசிய அவர் ஓபிஎஸ்சிடம் பேச முடியவில்லை எனவும், எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து பேசியுள்ளதாகவும், தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியதாக அண்ணாமலை தெரிவித்தார். நேற்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

காலை 10.30க்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற இக்கூட்டத்தில் பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி , பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘பாஜகவில் சென்னை உட்பட 4 மாநகராட்சிகளுக்கான விருப்பமனு நேர்காணல் நிறைவு பெற்றது. நாளை மறுநாளுக்குள் அனைத்து மாவட்டத்திலும் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். 

அண்ணாமலை விரைவில் வேட்பாளர்களை அறிவிப்பார், 31 ம் தேதிக்குபின் வேட்புமனு தாக்கல் தொடங்கும். அனைத்து மாவட்ட தலைமை அலுவலகத்திலும் காணொலி மூலம் அண்ணாமலை கருத்துகள் வழங்கியுள்ளார்.  இரண்டு நாளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். கூட்டணி தொடர்பாக இன்று மாவட்ட தலைவர்களுடன் முழுமையாக பேசினோம். கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க முழு அதிகாரம் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது. 

கூட்டத்தில் பேசப்பட்ட எல்லா விசயத்தையும் இங்கு பேச நான்  தயார் இல்லை, வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியுடனான பேச்சுவார்த்தை சுமூகம், சுமூகம் இல்லை என எந்த கருத்தையும் நான் கூறவில்லை. வினோஜ் செல்வம் மீதான வழக்கு கேவலமான பழிவாங்கும் படலம், தமிழகத்திற்கே தலைகுனிவு.  லாவண்யா பேசியதாக பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். நாங்கள் பார்த்த லாவண்யா வீடியோவில் கூறிய வாக்குறுதியை பார்த்ததன் அடிப்படையிலேயே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். 

இது முதன்முறை அல்ல. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே இதுபோல பல சம்பவங்கள்  நடந்துள்ளன.  தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்தால் முதலில் வரவேற்பு நாங்களாகத்தான் இருக்கும்’ என்று கூறினார். இது இப்படியிருக்க  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ‘எங்களுடன் இருந்தால்தான் கூட்டணி கட்சிகளுக்கு லாபம். இல்லாவிடில் அவர்களுக்குதான் நஷ்டம். கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்’ என்று கூறினார். இதனால் கடந்த தேர்தல்களை போலவே அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா ? என்ற கேள்வி எழுந்து உள்ளது. 

click me!