காங்கிரஸூக்கு அடுத்த சோதனை.. ம.பி. அரசை கவிழ்க்க பாஜக திட்டம்.. எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம்!

By Asianet TamilFirst Published May 27, 2019, 9:07 PM IST
Highlights

காங்கிரஸ் அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் ராம்பாய் பரபரப்பான புகார் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வந்தால், பணமும் அமைச்சர் பதவியும் தருவதாகக் கூறி பாஜக அழைத்ததாக அவர் புகார் கூறியுள்ளார்.
 

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினருடன் பாஜக பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 230  தொகுதிகளில் 114  தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மெஜாரிட்டிக்கு இரு உறுப்பினர்கள்  தேவைப்பட்ட நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் 2 உறுப்பினர்கள், சமாஜ்வாடியின் 1 உறுப்பினர் என 117 உறுப்பினர்களுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. 109 இடங்களைப் பிடித்த பாஜக எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது.


என்றாலும் மத்திய பிரதேச ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுவருவதாக காங்கிரஸ் தலைவர்கள் அவ்வப்போது புகார் கூறி வந்தார்கள். இந்நிலையில் காங்கிரஸ் அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் ராம்பாய் பரபரப்பான புகார் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வந்தால், பணமும் அமைச்சர் பதவியும் தருவதாகக் கூறி பாஜக அழைத்ததாக அவர் புகார் கூறியுள்ளார்.
 “மத்திய பிரதேசத்தில் எல்லா எம்எல்ஏக்களுக்கும் ஆசை வார்த்தைகளைக் காட்டிவருகிறது பாஜக. என்னை தொடர்புகொண்ட பாஜகவினர், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறினால், அமைச்சர் பதவியும் பணமும் தருவதாக கூறினர். 50 முதல் 60 கோடி ரூபாய் வரை தருவதாகப் பேரம் பேசுகிறார்கள். ஆனால், முட்டாள்கள்தான் பாஜக அணிக்கு செல்வார்கள்” என்று காட்டமாக ராம்பாய் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக முதல்வர் கமல்நாத்தும் இதே புகாரை தெரிவித்திருந்தார். “காங்கிரஸைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் தொடர்புகொண்டு, பணமும் பதவியும் தருவதாக பேரம் பேசுகிறார்கள்” என்று கமல்நாத் தெரிவித்திருந்தார். தற்போது காங்கிரஸை ஆதரிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினரை பாஜகவினர் தொடர்புகொண்டதாக வெளியாகி உள்ள புகாரால் மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!