
அரசு அதிகாரத்தை அரசியல் எதிரிகளுக்கு எதிராக இரண்டு வகையில் பயன்படுத்தலாம். ஒன்று, ‘எவன் என்னை கேட்பது’ என்கிற ரீதியில் வழக்கை போட்டு உள்ளே தள்ளுவது.
இந்த ரூட்டை கையிலெடுத்தால் சில சமயங்களில் மக்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடம். பாதிக்கப்பட்டவர்கள் ‘பாருங்கள் மக்களே சர்வாதிகாரம் காட்டுகிறார்கள்.’ என்று மக்களின் முன் நின்று கண்ணீர் வடித்து அனுதாபம் ஈட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
ஆனால் இரண்டாவது வகை ஒன்றிருக்கிறது. அது ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய் அடிக்கும் ரகம். அதாவது தனது அரசியல் எதிரியின் மேல் வருமான வரித்துறை ரெய்டை ஏவுவது. பொதுவாக மக்களுக்கு அரசியல்வாதிகளின் அதிகாரத்தை விட அவர்களின் ஏகபோக சுக வாழ்க்கையையும், ஆடம்பரத்தையும் பார்த்துதான் கடுப்பு அதிகமாக இருக்கும்.
இப்படி வருமான வரித்துறை ரெய்டை விட்டு மணிக்கணக்கான சோதனை நடத்தினால் ‘சைக்கிள்ள போயிட்டிருந்தாரு ஒரு காலத்துல. இன்னைக்கு துரைக்கு நாற்பது இடத்துல சொத்து இருக்குதாம். அள்ளிக் கொழிச்சான்ல அதான் கவர்மெண்டே அடிச்சுது ஆப்பு.’ என்று இந்த ரெய்டை மனம் பொங்க வரவேற்பார்கள்.
இதன் மூலம் அள்ளிக் குவித்த அந்த நபரையும் கார்னர் செய்தாற்போல் ஆச்சு, மக்கள் மத்தியிலும் அவர் பெயரை கெடுத்தாற்போல் ஆச்சு, மக்களையும் அவருக்கு எதிராய் தூண்டினாற்போல் ஆச்சு, அவர் சேர்த்த சொத்துக்களில் பலதை அரசு கஜானாவுக்கு அள்ளிட்டு வந்தாற்போல் ஆச்சு...இப்படி ஆச்சு ஆச்சு என பல பலன்கள்.
நம் மைய அரசு முழுக்க முழுக்க இந்த இரண்டாவது டெக்னிக்கைத்தான் பாலோ பண்ணுவதாக சொல்கிறார்கள் தேசிய அரசியல் பார்வையாளர்கள்.
இன்று லாலு பிரசாத் வீட்டிலும், ப.சிதம்பரம் வீட்டிலும் நடக்கும் ரெய்டுகள் இந்த ரகம்தான். அதற்காக லாலுவும், ப.சியும் நேர்மையான வருமானத்தை தாண்டி பல கோடிகள் குவித்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை.
அதை வருமான வரித்துறை முடிவு செய்து கொள்ளும். ஆனால் இருவருமே பா.ஜ.க.வுக்கு எதிரான நபர்கள். லாலு ஒரு அதிரடி பேர்வழி, ப.சி.யோ சைலண்ட் ராக்கெட். அரசியல் ரீதியில் இரண்டு பேரையும் சமாளிக்க பா.ஜ.க.வுக்கு பெரிய ஆளுமை தேவை. அதை இந்த வகையில் செய்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பீகாரின் முன்னாள் முதல்வரான லாலுபிரசாத் யாதவ் ரூபாய் ஆயிர கோடிக்கும் பினாமி பெயரில் நில மோசடி செய்ததாக பா.ஜ.க. குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார் லாலு. இந்நிலையில்தான் அவருக்கு சொந்தமான குர்கான் மற்றும் டெல்லி உட்பட பல இடங்களில் ஐ.டி. மையம் கொண்டிருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த வைபரண்ட் அரசியல்வாதியும், தேசிய அளவில் காங்கிரஸின் பெரும் ஆளுமையுமான ப.சிதம்பரத்தின் சொத்துக்களிலும் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது.
சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு முறைகேடாக இந்தியாவில் அனுமதி அளிக்க அவர் மகன் கார்த்தி சிதம்பரம் 90 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இதன் நீட்சியாகவே சிதம்பரம் மற்றும் கார்த்தியின் இல்லங்கள் உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நிகழ்கிறது.
இதுக்கு ரியாக்ட் செய்திருக்கும் சிதம்பரம் ‘பா.ஜ.க. அரசு திட்டமிட்டு என் மகன் மற்றும் அவரது நண்பர்களை குறிவைத்து இதை செய்கிறார்கள். எங்கள் குடும்பம் எந்த முறைகேடிலும் இறங்கியதில்லை.
என்னை சைலன்ட் செய்யவே பா.ஜ.க. அரசு இதையெல்லாம் செய்கிறது. நான் எழுதுவதையும், பேசுவதையும் தடுத்திடவே இது போன்ற ஏவல் காரியங்களை செய்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள், எதிர்கட்சி தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக இப்படியான நடவடிக்கைகளை எடுத்து அவர்கள் தங்களை விமர்சிப்பதை தடுப்பதுதான் பா.ஜ.க.வின் ஸ்டைல். இதைத்தான் என் விஷயத்திலும் செய்கிறார்கள். ஆனால் நான் தொடர்ந்து பேசுவேன், எழுதுவேன்.’ என்றிருக்கிறார்.
லாலு மற்றும் ப.சிதம்பரம் எனும் இரண்டு வெவ்வேறு ஜானர்களை சேர்ந்த பிராந்திய தலைவர்களின் சொத்துக்களின் மேல் பாய்ந்திருக்கும் இந்த ரெய்டானது டெல்லியிலும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது.